புதன், 24 செப்டம்பர், 2014

நலம் தரும் நவராத்திரி [ தொடர்ச்சி ]


நலம் தரும் நவராத்திரி [ தொடர்ச்சி ]


நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. இந்த நவராத்திரி பெண்களின் பெருமையைப் போற்றும் விழா , பெண்களின் கைவினைத்திறன், கற்பனை சக்தியைத் தூண்டும் விழா.
நவராத்திரி சமயத்தில் வீட்டில் "கொலு" என்னும் அமைப்பில், பல்வேறு வகையான பொம்மைகளை அமைத்து, அம்பிகையை அமைத்து, வழிபாட்டுடன், ஆடலும் பாடலுமாக வீடே சொர்க்கலோகம் போல காட்சியளிக்கும்.
நவராத்திரி வழிபாட்டால்,
பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன்.
கன்னியர்கள் பெறுவது திருமணப் பயன்.
சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன்.
மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன நிறைவு;
எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.
ஐம்பூதத்தில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்…’ என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடியால் அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில், குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய அங்கம் பெறுகிறது. மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு.மூன்று, ஐந்து , ஏழு என ஒற்றைப்படையில் அமைக்கலாம்
கொலு வைக்கும் முன்னர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது சிறப்பு. நவராத்திரி கொண்டாடும் நாட்களில் இரவில் பூஜை நடத்த வேண்டும். அப்போது சுமங்கலி பெண்களை அழைத்து அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமம் கொடுத்து அனுப்ப வேண்டும்.
வசதி படைத்தவர்கள் பரிசு பொருளும் கொடுக்கலாம். பரிசு பொருளில் குங்கும சிமிழ் இடம் பெறுவது நல்லது. கடைசி நாள் ஆயுத பூஜை அன்று பூஜையை சிறப்பாக நடத்தலாம். மறுநாள் விஜயதசமி. கொலு வைப்பவர்கள் அதையும் கொண்டாட வேண்டும்.அதன் பின்தான் கொலுவை கலைக்க வேண்டும். விஜயதசமி அன்று நாம் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். மேலும் புதிய தொழில் ஆரம்பிக்கலாம். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம். புதிய கலை பயில்வோர், இந்த நாளில் தொடங்கலாம். வீட்டில் கொலு வைப்பதால் முப்பெருந்தேவியரின் அருள் கிடைக்கும்.
ஒன்பது படிகள் என்ற முறையில் கீழிருந்து வரிசையாக,
முதல் படியில் ஓரறிவுள்ள செடி, கொடி, மரங்கள்.
இரண்டாவது படியில் ஈரறிவுள்ள சங்கு, நத்தை, அட்டை மெதுவாக ஊரும் உயிரினங்கள்
மூன்றாவது படியில் கறையான், எறும்பு முதலான, சற்று வேகமாக ஊர்ந்து போகும் மூவறிவுள்ள ஜீவராசிகள்
நான்காவது படியில் பறவை, வண்டு முதலான நான்கறிவுள்ள உயிரினங்கள்.
ஐந்தாவது படியில் பசு முதலான ஐந்தறிவுள்ள உயிரினங்கள்.
ஆறாவது படியில் குறவன்-குறத்தி, செட்டியார், பாம்புப் பிடாரன் முதலான ஆறறிவுள்ள மனிதர்களின்
பொம்மைகள்.
ஏழாவது படியில் ஞானிகள் மகான்களின் வடிவங்கள்
எட்டாவது படியில் தசாவதாரம் முதலான தெய்வ வடிவங்கள்.
ஒன்பதாவது படியில் அதாவது மேல் படியில் பூர்ண கும்பத்துடன் அம்பிகையின் திருவடிவம் மட்டுமே இருக்க வேண்டும். அவள் அருளால்தான் பலப்பல ஜீவராசிகள் உருவாகி, படிப்படியாக உயர்ந்து மேல் நிலையை அடைகின்றன என்பதை உணர்த்தவே இந்தக் கொலு அமைப்பு.
நவராத்திரி கொலுவில் கீழே உள்ள மூன்று படிகளில் வைக்கப்படும் அரிசி, பருப்பு, பாத்திரம் போன்றவை, தாமச குணத்தையும் அடுத்த மூன்று படிகளில் வைக்கப்படும் அரசர், ராணி, மந்திரி போன்றவை, ரஜோ குணத்தையும் மற்ற மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வ உருவங்கள் சத்துவ குணத்தை அடையும் வழியை நமக்குக் காட்டுகின்றன.
நவகன்னிகா வழிபாடு
இந்த ஒன்பது நாட்களிலும் இரண்டு முதல் ஒன்பது வயது வரையிலுள்ள சிறுமிகளை அம்பாளாக பாவித்து, வயது வரிசைப்படி, ஒரு நாளைக்கு ஒரு குழந்தை வீதம், குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து, பூஜித்து வழிபடுவது முறையாகும்.
முதல் நாளில் 2 வயதுக் குழந்தை - குமாரி
இரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை - திரிமூர்த்தி
மூன்றாம் நாள் - 4 வயதுக் குழந்தை - கல்யாணி
நான்காம் நாள் - 5வயதுக் குழந்தை - ரோஹிணி
ஐந்தாம் நாள் - 6 வயதுக் குழந்தை - காளிகா
ஆறாம் நாள் - 7 வயதுக் குழந்தை - சண்டிகா
ஏழாம் நாள் - 8 வயதுக் குழந்தை - சாம்பவி
எட்டாம் நாள் - 9 வயதுக் குழந்தை - துர்கா
ஒன்பதாம் நாள் - 10 வயதுக் குழந்தை - ஸுபத்ரா
என்று வணங்கப்படுவார்கள்.
நாள்-----------வழிபாடு----------------------நைவேத்தியம்
1 ----------- சாமுண்டி-----------------------சக்கரை பொங்கல்
2 ----------- வராகி தேவி-------------------தயிர் சாதம்
3 ----------- இந்திராணி---------------------வெண்பொங்கல்
4 ----------- வைஷ்ணவி தேவி--------எலுமிச்சை சாதம்
5 ----------- மகேஸ்வரி தேவி----------புளியோதரை
6 ----------- கவுமாரி--------------------------தேங்காய் சாதம்
7 ----------- மகாலக்ஷ்மி--------------------கல்கண்டு சாதம்
8 ----------- நரசிம்மகி------------------------சக்கரைபொங்கல்
9 ----------- பிராக்மி----------------------------அக்கார வடிசல்
நன்றி [ பல பிரசுரங்கள் , இணைய தொகுப்பு ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக