ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

திருநீறு அணியும் முறை

திருநீறு அணியும் முறை
"நீறிலா நெற்றிப் பாழ்" என்கிறார் ஔவையார். நமது நெற்றியில் எப்போதும் திருநீறு அணிந்து இருத்தல் மிக நல்லது. நம் உடலில் உள்ளிருக்கும் ஆன்மாவிற்கு இது சிவபலத்தை தருகிறது.
திருநீற்றின் பிறபெயர்கள்
"நீட லுறுந்தீ வினையனைத்தும் நீற்றி விடலால் நீறென்றும்
வீடில் வெறுக்கை தருதலினால் விபூதி யென்றும் உயிர்தோறும்
கூடு மலமா சினைக்கழுவுங் குணத்தால் சாரம் என்றும் மடல்
ஓட வளர்சோ தியைத்தரலால் பசிதம் என்று உரைப்பாரால்"
விபூதி, சாரம், மடல், பசிதம் என்று திருநீற்றிற்கும் பல பெயர்கள் உள்ளன. இத்தகைய திருநீற்றைப் பூசிக்கொள்வதில் இரண்டு முறைகள் உள்ளன.
1. பொடியாகப் பூசிக்கொள்ளுதல்
2. திருநீற்றினை நீரில் குழைத்து மூன்று கோடுகளாக அணிதல்
பொடியாகப் பூசிக்கொள்ளுதல்
இது அனைவரும் பின்பற்றும் முறையாக உள்ளது. பொதுவாக சமய தீக்கை அதாவது முறைப்படி சிவாகம உபதேசம் பெறாதோர் இவ்வாறு அணியலாம்.
"திருநீற்றினை உத்தூளித்து ஒளி மிளிரும் வெண்மையனே" என்று மாணிக்கவாசகரின் "நீத்தல் விண்ணப்பம்" உணர்த்துகிறது.
நீரில் குழைத்து அணிதல்
சமய தீக்கைப் பெற்றவர்கள், திருநீற்றினைச் சிறிது கையில் எடுத்து நீரில் குழைத்து வலது கையின் நடு மூன்று விரல்களால் எடுத்து மூன்று கோடுகளாக உடம்பில் பதினாறு இடங்களில் அணிவர்.
விபூதி
1 - உச்சி
2 - நெற்றி
3 - மார்பு
4 - கொப்பூழ் (தொப்புள்)
5 & 6 - இரண்டு முழந்தாள்கள்
7 & 8 - இரண்டு கைகளிலும் உள்ள இரு தோள்கள்
9 & 10 - முழங்கைகள்
11 & 12 - மணிக் கட்டுகள்
13 & 14 - இரு காதுகள்
15 - கழுத்து
16 - முதுகுத் தண்டின் அடி
முதலிய பதினாறு இடங்களில் திருநீறு அணிய வேண்டும்.
இவை ஒழுக்கம், அன்பு, அருள், ஆசாரம், உபசாரம், உறவு, சீலம், தவம், தானம், வந்தித்தல், வணங்கல், வாய்மை, துறவு, அடக்கம், அறிவு, அரச்சித்தல் முதலிய அறச்செயல்களை ஆன்மாவிற்கு உணர்த்துகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக