வியாழன், 1 ஜனவரி, 2015

திருவாதிரை விரத முறை





***திருவாதிரை விரதத்தின் பெருமை, அனுஷ்டிக்கும் முறை, ***ஆனந்த நடராஜபெருமானின் 6 அபிடேக தினங்கள் :

இதற்கு முந்தைய பதிவில் மார்கழி மாதத்தின் பெருமையையும், பிறப்பிலியாகிய சிவபெருமான் எவ்வாறு திருவாதிரை நட்சத்திரத்திட்கு உரியவராகி திருவாதிரையான் ஆனார் என்பதையும் பார்த்தோம்., படிக்காதவர்கள் படிக்க!!.. இன்றைய பதிவில் நடராஜப் பெருமானின் ஏனைய அபிசேக தினங்களையும் , திருவாதிரையில் அருள் பெற்ற பதஞ்சலி, வியாக்ரக பாதர் ஆகியோரது வரலாற்றையும் பார்ப்போம்.

**ஸ்ரீ நடராஜபெருமானின் 6 அபிடேக தினங்கள்.

எமது ஒருவருடமே தேவர்களின் ஒருநாளாகும். எமக்கு எவ்வாறு சிவாலயங்களில் 6 கால பூஜை ஆகமங்களில் விதிக்கப்பட்டதோ அவ்வாறே தேவர்களும் சிவபெருமானை 6 காலங்களும் பூஜித்து அருள் பெறுகின்றனர். ((இன்று நாம் தினமும் ஒருகாலமாமது சிவபெருமானை வழிபடுவதை மறந்துவிட்டோம் என்பது குறிப்பிடத்தக்கது)). அந்த 6 காலங்களுமே ஆனந்த நடராஜ மூர்த்தியின் 6 அபிடேக தினங்களாகும். இந்தத் தினம் தவிர வேறு எந்த நாட்களிலும் நடராஜருக்கு அபிடேகம் நடப்பதே இல்லை. அவையாவன…

1, ***மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்,- தேவர்களின் அதிகாலை பூஜை, (தனுர்மாத பூஜை),- சிறப்பு அபிசேகம் , நடராஜர் உற்சவம்

2, மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி - தேவர்களின் காலை சந்தி பூஜை,-அபிசேகம் மட்டும்.

3, சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம் – தேவர்களின் உச்சிக்கால பூஜை,- அபிசேகம் மட்டும்.

4, ***ஆனி மாதம் உத்திர நட்சத்திரம் – தேவர்களின் சாயங்கால பூஜை.- சிறப்பு அபிசேகம் , நடராஜர் உற்சவம்.

5, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி - தேவர்களின் இரண்டாம் கால பூஜை,- அபிசேகம் மட்டும்.

6, புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி – தேவர்களின் அர்த்தஜாம பூஜை.- அபிசேகம் மட்டும்.

***திருவாதிரை விரதித்தின் பெருமை***

ஸ்கந்த புராணத்தில் ஆருத்ரா என்றழைக்கப்படும் திருவாதிரை, முழுப் பௌர்ணமி கூடிய தினத்தன்று தான் நடராஜப்பெருமான் மாமுனி பதஞ்சலிக்கும், வியாக்ரபாதருக்கும் தனது ஆனந்த தாண்டவ திருக்கோலத்தை தில்லையில் காட்டியதாக வரலாறு., வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி ஆகியோர் இந்த திருவாதிரை விரதத்தை கடைப்பிடித்து ஐயனின் ஆனந்தத் தாண்டவத்தை தரிசனம் செய்யும் பேறு பெற்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

**மாமுனி பதஞ்சலி :-

பதஞ்சலி முனிவர் பூர்வ ஜன்மத்தில் வைகுந்தத்தில் ஆதிசேடனாக இருந்து திருமாலை தாங்கியவர். பாற்கடலில் பரந்தாமன் பள்ளிகொள்ளும் போது ஒருமுறை ஆதி சேடன் என்கிற நாகம் திருமாலின் பாரம் கூடிகொண்டுபோவதாக உணர்ந்தார். இதற்கான காரணத்தையும் திருமாலிடம் வினாவினார். அதற்கு திருமால் கூறினார் தாம் யோக நித்திரையில் இருந்தபடி பரமேஸ்வரரின் திருநடனத்தை மீட்டு ரசித்துக்கொண்டிருப்பதாகவும், அதனால் தன் உடலில் சக்தி பெருக, உடல் நிறை கூடிக்கொண்டு சென்றது என்று காரணம் கூறினார்.-( இதனால் தான் தில்லையில் ஆனந்த நடராஜ மூர்த்தியை நோக்கியவாறே திருமால் பள்ளிகொண்டவராக, மூலஸ்தானதிட்கு எதிரே தனி சன்னதியுடன் வேறெந்த சிவாலயத்திலும் இல்லாதவகையில் இங்கு மட்டும் எழுந்தருளியுள்ளார் ).-

இதை கேள்வியுற்ற ஆதிசேடனிட்கு தாமும் அந்த திருநடனத்தை காணவேண்டுமென்று ஆவல் பெருக, அதற்கு வழிகாட்டுமாறு திருமாலிடம் இரந்தார். திருமாலும் அதற்கியைந்து பின்வருமாறு கூறலானார். பூலோகத்தில் தில்லை மரங்கள் சூழ்ந்த சிதம்பரம் என்கின்ற தில்லை வனத்தில் வியாக்ரகபாதர் என்கின்ற புலிக்கால் முனிவர் சிவபெருமானின் திருநடனத்தை காண தவம் செய்வதாகவும், அவருடன் சேர்ந்து தவத்தை தில்லையில் தொடர்ந்தால் இலகுவில் ஆதிசேடனின் எண்ணம் நிறைவேறுமெனவும் கூறினார்.

அதன்படி அத்திரி மகரிஷி- அனுசுயா தேவி தம்பதியரின் மகனாக ஆதிசேடன் அவதரித்தார். அவருக்கு பதஞ்சலி என்ற பெயர் வைக்கப்பட்டது. பதஞ்சலி முனிவர், தன்னுடைய ஏழு நண்பர்களுடன் இணைந்து நந்திதேவரிடம் இருந்து இறைவழிபாட்டுடன் இணைந்த, மனம், வாக்கு, உடல் சுத்தம் என்னும் வாழ்க்கைக் கலையைக் கற்றுத்தேர்ந்தார். இவரே இன்று உலகம் முழுதும் அரிய பொக்கிசமாகபோற்றும் யோக கலையை உலகிற்கு இலகு வடிவில் யோக சூத்திரமாக அறிமுகப்படுத்தியவர்.

அதை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பல ஊர்களுக்கும் சென்றார். அதன் ஒரு பகுதியாக தன் பிறப்புக்கு காரணமான நடராஜ பெருமானின் ஆனந்த தாண்டவம் காணும் விருப்பதின் அடிப்படையில் சிதம்பரம் வந்து சேர்ந்தார். அங்கு நெடுங்காலம் தங்கி திருமூலட்டானர் என்னும் நாமத்துடன் விளங்கிய சுஜம்பு மூர்த்தியாகிய சிவலிங்க பெருமானை தரிசித்து தவமியற்றினார். நற்றவத்தின் பயனாக சிவபெருமானின் திருனடனத்தினை பௌர்ணமியுடன் கூடிய மார்கழித் திருவாதிரை நாளில் காணும் பேறும் பெற்றார் .

**மாமுனிவர் விஜாக்ரக பாதர்.

பதஞ்சலி முனிவருடன் தில்லையில் நடனம் கண்ட மற்ற முனிவர் வியாக்ரகபாத முனிவராவார். இதனால் தான் இவர்கள் இருவரின் திருவுருவங்கள் அனேகமாக நடராஜரிட்கு முன்னே ஸ்தாபிக்க பட்டிருக்கும். இவர் பதஞ்சலி முனிவரின் பிறப்பிற்கு முன்பிருந்தே தில்லை வனத்தில் தவமியற்றிக் கொண்டிருந்தவராவார். மத்யந்தின முனிவரது மகனே புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்படுகிறார். தமது தந்தையைப் போலே சிவபெருமானை அர்ச்சித்து வழிபட ஆசைக்கொண்ட அவர், தினமும் தில்லை வனத்தில் இருந்த சிவலிங்கத்திற்கு அங்குள்ள வனத்தில் பூப்பறித்து வழிபட்டு வரலானார்.

அடர்ந்த காடு, வழ வழப்பான மரங்கள், பழுத்துக் கிடக்கும் பூக்கள், வண்டு தேன் எடுத்த மலர்கள்.... இவையெல்லாம் அவரது பூஜைக்கு இடையூறாய் இருக்க...அவர் வேறு யாரிடம் வேண்டுவார்!? சிவனாரிடமே வேண்டினார்.!! என்னவென்று!? " ஐயா... ஸ்வாமி.... எனக்கு புலிகளுக்கு இருப்பது போல கால்களைக் கொடு.... அந்த கால்களில் உள்ள நகங்கள் இடையூறின்றி மரமேறவும், நல்ல பூக்களைப் பறிக்கவும் எனக்கு அருள் புரிவாய்! மேலும் உடல் முழுவதும் கண்களை கொடு சிறந்த பூக்களைத் தேடித் பறித்து சிவபூஜை செய்ய. . உன் பூஜைக்கு இடையூறு அளிக்காதே! என்ன ஒரு அற்புதமான வேண்டுதல் பாருங்கள்.!! இவரும் பதஞ்சலி முனிவருடன் சிவபெருமானின் திருனடனத்தினை பௌர்ணமியுடன் கூடிய மார்கழித் திருவாதிரை நாளில் காணும் பேறும் பெற்றார்..

**திருவாதிரை விரதத்தினை அனுஷ்டிக்கும் முறை

பரமனிடம் பாற்கடலையே பெற்ற உபமன்யு முனிவரை வியாக்ர பாதர் மகனாக பெற்றது இவ்விரத மகிமையால்தான். விபுலர் என்னும் பிராம்மணர் இவ்விரத மகிமையால் பூத உடலுடன் திவ்ய வாகனத்தில் திருக்கயிலாயம் சென்று திரும்பி வந்தார், பின்னர் பலகாலம் பூவுலகில் இனிது வாழ்ந்து முக்தியும் பெற்றார். திருவாதிரையன்று எம்பெருமான் ஆனந்த நடமாடி களித்திருப்பதால் இவ்விரதத்தை கடைப்பிடித்தால் அவரை எளிதில் திருப்திபடுத்தலாம்.

ஸ்கந்த புராணத்தில் கூறியுள்ளபடி மார்கழிமாத திருவாதிரை அன்று காலை எழுந்து ஆனந்தக் கூத்தாடும் அம்பல வாணரையும் அம்மை சிவானந்த வல்லியையும் ஆத்மார்த்தமாக வணங்கி உடல் சுத்தி செய்து, திருநீறந்து பஞ்சாக்ஷர மந்திரம் ஓதிக் கொண்டு சிவாலயம் சென்று எம்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வித்து, அமுது படைத்து, நெய் விளக்கேற்றி வழிபட்டு, நாள் முழுவதும் உண்ணா நோன்பிருந்து அந்த எம்பெருமானையே நினைத்துக் கொண்டிருந்து, ”பொன்னம்பலம் நீடூழி வாழ்க”, சித் சபேசா, ஆனந்த தாண்டவ நடராஜா, சிற்றம்பலா, அம்பலவாணா என்று பல் வேறு நாமங்களால் போற்றி வணங்கி மறு நாள் காலை எழுந்து முக்கண் முதல்வரை வணங்கி அவரின் அடியவர்களுக்கு அமுது செய்வித்து, பின் தானும் பிரசாதம் புசித்து விரதத்தை முடிக்க வேண்டும்.

இம்முறை மார்கழி திருவாதிரை 5/01/2015.
கண்களிரண்டும் பதிகம் முழுதும் கேட்க இங்கே அழுத்துக https://www.youtube.com/watch?v=u_3GmFo4ePw&index=41&list=PL3DBDD6B5163DFC10

ஈழத்து சிதம்பரம் திருவெம்பாவை முழுதும் கேட்க... https://www.youtube.com/watch?v=6Ve4sIOXlME

”பொன்னம்பலம் நீடூழி வாழ்க”.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக