வியாழன், 1 ஜனவரி, 2015

பஞ்ச பூதங்கள்






பஞ்ச பூதங்கள் எவ்வாறு மனித உடலை தீர்மானிக்கின்றன
உடலெனும் பிரபஞ்சம்... பிரபஞ்சம்

ஐம் பூதங்களின் மொத்த உருவே பிரபஞ்சம். இதுபோல் மனித உடலும் ஐம் பூதங்களால் ஆன சிறிய பிரபஞ்சம் என்கிறார்கள் சித்தர்கள். இதைத்தான் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.

இந்த பஞ்ச பூதங்கள் எவ்வாறு மனித உடலை தீர்மானிக்கின்றன, அவற்றின் செயல்பாடுகள் என்ன என்பதை விரிவாக அறிந்துகொள்வோம்.

மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்ச பூதங்கள்.

இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானது தான் மனித உடல் எனும் பிரபஞ்சம்.

நிகழ்ந்த சீர்ப் பிருதிவியும் அப்பு நானும்

நேரான தேயுவோடு வாயுமாகும்

அகழ்ந்தவா காயத்தோ டைந்து பூதம்

அரிதான பிருதிவியு மண்ணு மாகும்

தகழ்ந்தவப்பு சலமாகும் நெருப்பாற் தேயு

தாக்கான வாயுவது காற்றுமாகும்

இகழ்ந்தவா காயமது சத்தமாகும்

ஏற்றபிரு திவியும் பொன்னிறமதாமே

யூகி வைத்திய சிந்தாமணி

மண்ணின் கூறுகள்

மண்ணை பிருத்திவி என்று அழைக்கின்றனர். எலும்பு, தோல், நரம்பு, தசை, மயிர் இவை அனைத்தும் மனித உடம்பின் மண் கூறு கொண்டவை.

பிருத்திவியில் பிருத்திவி அதாவது மண்ணில் மண் சேர்ந்ததால் உருவானதுதான் எலும்பு என்றும், மண்ணுடன் நீர் சேர்ந்து உருவானது தசை என்றும், மண்ணுடன் நெருப்பு சேர்ந்து உருவானது தோல் என்றும், மண்ணுடன் வாயு சேர்ந்து உருவானது நரம்பு என்றும், மண்ணுடன் ஆகாயம் சேர்ந்து உருவானது மயிர் என்றும் குறிப்பிடுகின்றனர்.

நீரின் கூறு (புனலின் கூறு)

நீரின் தன்மை கொண்டவை இரத்தம், விந்து (வெந்நீர்), சிறுநீர், மூளை, கொழுப்பு. நீரினை புனல் என்று அழைக்கின்றனர். நீருடன் நீர் சேர்ந்து வெளியேறுவது சிறுநீர் என்றும், நீருடன் மண் (பிருத்திவி) சேர்ந்து உருவானதுதான் உமிழ்நீர் என்றும், நீருடன் நெருப்பு சேர்ந்துதான் வியர்வையானது எனவும், நீருடன் வாயு சேர்ந்துதான் இரத்தம் (குருதி, செந்நீர்) உண்டானது எனவும், நீரின் கூறுடன் ஆகாயம் சேர்வதால் உருவானதுதான் சுக்கிலம் எனப்படும் விந்து எனவும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நெருப்பின் கூறு

உணவு, தூக்கம், அச்சம், சேர்க்கை, சோம்பல் முதலியவை நெருப்பின் கூறாகும். நெருப்பை தேயு (தீ) என அழைக்கின்றனர்.

நெருப்பு கூறுடன் நெருப்பு சேரும்போது தூக்கம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் மண் சேரும் போது பசி உருவாகிறது எனவும், நெருப்புடன் நீர் சேரும்போது தாகம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் வாயு சேரும்போது அச்சம், சோம்பல் உருவாகிறது எனவும், நெருப்புடன் ஆகாயம் சேரும்போது ஆசை, சேர்க்கை உருவாகிறது எனவும் குறிப்பிடுகின்றனர்.

வளியின் (காற்று) கூறு

ஓடல், நடத்தல், நிற்றல், உட்காருதல், படுத்தல்.

வாயுவுடன் வாயு சேரும்போது ஓடுதல் நடைபெறும் என்றும், வாயுவின் கூறுடன் மண் (பிருத்திவி) சேரும்போது படுத்தல் எனவும், வாயுடன் நீர் சேரும்போது நடத்தல் நடைபெறும் என்றும், வாயுவுடன் நெருப்பு இணையும்போது உட்காருதல் நிகழும் என்றும் வாயுவுடன் ஆகாயம் சேரும்போது தாண்டுதல், குதித்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

விண்ணின் (ஆகாயம்) கூறு

இன்பம் (காமம்), உட்பகை (குரோதம்), ஈயாமை (உலோபம்), பெருவேட்கை (மோகம்), கொழுப்பு (மதம்)

விண்ணின் தன்மையுடன் ஆகாயம் சேரும்போது மோகம் உண்டாவதாகவும், ஆகாயத்துடன் மண் சேரும்போது இராகம் உருவாவதாகவும், ஆகாயத்துடன் நீர் சேரும்போது துவேசம் ஏற்படுவதாகவும், ஆகாயத்துடன் நெருப்பு இணையும்போது பயம் உருவாவதாகவும், ஆகாயத்துடன் வாயு சேரும்போது நாணம் ஏற்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

மனித உடலில் ஐம்பூதங்களின் செயல்பாடுகளை சித்தர்கள் இவ்வாறு விளக்கியுள்ளனர்.

மண்ணின் தன்மையால் மயிர் வளர்கிறது. எலும்பு வலுவடைகிறது. நரம்புகள் அதிக வேகத்துடன் செயல்படுகின்றன. தசைகள் இறுக்கம் கொள்கின்றன.

இவ்வாறு பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளால் தான் மனித உடல் உருக்கொண்டுள்ளதாக சித்தர்கள் கூறுகின்றனர்.

இதே கருத்தையே ஆன்மீகம் தெரிவிக்கிறது. சைவ சமயத்தில் பஞ்ச பூதங்களுக்கும் கோவில்கள் அமைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மண் (பிருத்திவி)

திருவாணைக்கால் நீர்

திருவண்ணாமலை நெருப்பு

காளஹஸ்தி காற்று

சிதம்பரம் ஆகாயம்.

பஞ்ச பூதங்களையே தெய்வ வடிவமாக வணங்கி வரச் செய்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக