அரவான் .................
அர்ச்சுனனுக்கும்– உலுபியான நாகக் கன்னிக்கும் பிறந்தவன்தான் அரவான். பிறப்பிலேயே 32 லட்சணங்கள் கொண்டவன். எதிர் ரோமம் உடையவன். பாரதப் போரில் வெல்வது எப்படி? என்று யோசித்த துரியோதனன், ஜோதிடத்தில் வல்லவனான சகாதேவனிடம் ஆலோசனை கேட்டான்.
‘அரவானைப் பலியிட்டால் போரில் வெற்றி பெறலாம்’ என்று சகாதேவன் சகாயம் கூறினான். துரியோதனன் அரவானிடம் சென்றான். தனது பெரிய தந்தையை வரவேற்றான் அரவான். சகுனியின் ஆலோசனைப்படி வந்திருந்த துரியோதனன், ‘நாங்கள் போரில் வெற்றிபெற வருகின்ற அமாவாசை அன்று நீ எங்களுக்கு நரபலியாகி உதவ வேண்டும்’ என்று அரவானிடம் கேட்டான்.
அதற்கு அரவானும் சரியென்று ஒப்புக்கொண்டான். மேலும் ஒரு நிபந்தனையும் விதித்தான். அதாவது, ‘அமாவாசை வரை என் மேனி பின்னமாகாமல் இருந்தால், கண்டிப்பாக வருகிறேன்’ என்று உறுதி கூற மகிழ்வோடு திரும்பினான் துரியோதனன். அரவான், துரியோதனனுக்கு வாக்கு கொடுத்துவிட்டதை கண்ணன் அறிந்து கொண்டார்.
எனவே அமாவாசைக்கு முன்தினமாகிய சதுர்த்தசி அன்றே, அமாவாசை வரட்டும் என்று கண்ணன் கூற, அவ்வாறே அமாவாசை ஏற்பட்டது. இதற்கிடையில் அரவான் தங்களுக்காக நரபலி ஆக வேண்டும் என்று பாண்டவர்கள் வந்து கேட்டனர். ‘துரியோதனன் வந்து கேட்டதால், அவருக்காக நரபலியாக சம்மதம் கூறினேன்.
ஆனால் அமாவாசை வந்த பின்பும் அவர்களைக் காணவில்லை. எனவே உங்களுக்காக நரபலியாக சம்மதிக்கிறேன்’ என்று கூறினான் அரவான். மேலும் கண்ணனிடம் ஒரு வரத்தையும் கேட்டான் அரவான். அதாவது, ‘என்னைப் பலியிட்டாலும் என் தலைக்கு உயிர் இருக்க வேண்டும்.
அத்துடன் சாகும் முன்பாக ஒரு பெண்ணை, நான் திருமணம் முடிக்க வேண்டும்’ என்றான். கண்ணனும், ‘அப்படியே ஆகட்டும்’ என்றார். இதையடுத்து நடந்த போர்க்களத்தில் அரவான் பலியானான். அவனது உடல் மட்டும் அழிய, தலை உயிர் பெற்றது. பாரதப் போரில் பாண்டவர்கள் வென்றார்கள். இதனால் அரவானின் தலை மட்டும் திரவுபதி ஆலயங்களில் தவறாமல் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக