செவ்வாய், 23 செப்டம்பர், 2014

நவராத்திரி பலன்கள்




நலம் தரும் நவராத்திரி 
25.09.2014 - 03.10.2014
பண்டிகைகள் மிகுந்த இந்து மதத்தில் ஏறக்குறைய அனைத்து கடவுள்களுக்கு ஒரே ஒரு நாள் மட்டும் விசேஷமாய் கொண்டாடப்படும்.கிருஷ்ண ஜெயந்தி , விநாயகர் சதுர்த்தி இவற்றில் சில..ஆனால் சக்தி வழிபாடு வருடத்தில் நான்கு முறை ஒன்பது நாட்கள் நவராத்திரியாக கொண்டாடப்படும்.
1. ஆனி மாத அமாவாசைக்குப் பின்னர் வருவது ஆஷாட நவராத்திரி.
2. புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின்னர் வருவது மகா நவராத்திரி.
3. தை மாத அமாவாசைக்குப் பின்னர் வருவது மாக நவராத்திரி.
4. பங்குனி மாத அமாவாசைக்குப் பின் வருவது வசந்த நவராத்திரி
படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று சக்திகளைக் கொண்ட அன்னையின் அருள் வேண்டி பூஜை செய்தலே நவராத்திரி வழிபாடாகும். நவராத்திரியில் ஒன்பது தினங்களும் பூஜிக்க வேண்டிய அன்னையின் சக்திகள் , குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா. இவர்களைப் பூஜிக்கையில் இந்த சக்திகளுக்கு மூலகாரணியான பராம்பிகையை உரிய தியான ஸ்லோகங்களால் தியானித்து பின்னர் பூஜை, ஜபம், ஹோமம் போன்றவற்றை இந்த சக்திகளுக்குச் செய்யவேண்டும் .
இந்த ஒன்பது நாளும் ஒன்பது வகையில் மலர் வழிபாடு செய்து கொலுவிருக்கும் தேவியரை ஒன்பது ராகங்களில் துதித்து, ஒன்பது வகைப் பழங்கள், பிரசாதங்கள் படைத்து அன்னையின் மனம் மகிழ்வுறச் செய்யவேண்டும் .
துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என மூவகையாக மும்மூன்று நாட்கள் விழாக் கொண்டாடுவதும், இறுதியில் பத்தாம் நாள் அம்மனை சிம்ம வாகனத்தில் ஊர்வலமாகக் கொண்டு சென்று சூரனை வதம் செய்த நிகழ்ச்சியாக பாரிவேட்டையும் நடைபெறும் .
பிரதமை முதல் திரிதியை வரையில் கிரியா சக்தியாகிய துர்க்கா தேவியை வீரத்தையும், தைரியத்தையும் வேண்டியும் , சதுர்த்தி முதல் சஷ்டி வரையில் இச்சா சக்தியாகிய மகாலட்சுமியை செல்வத்தை வேண்டியும் , சப்தமி முதல் நவமி வரையில் ஞான சக்தியாகிய சரஸ்வதியை கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டியும் வழிபாடு செய்து தசமியில் நவராத்திரியை நிறைவு செய்ய வேண்டும் .
இந்த பூஜை வங்கத்தில் துர்க்கா பூஜை எனவும் , வடக்கே ராம் லீலா உற்சவமாகவும், கர்நாடகா, குலசேகரப்பட்டினம், குலுமணாலி, ஜகதல்பூர் தண்டேஸ்வரி ஆலயம் போன்ற இடங்களில் தசரா பண்டிகையாகவும் கொண்டாடுகின்றனர். இவ்விழாக் கொண்டாட்டத்தில் பெண் குழந்தைகள் தினம் ஒரு வேடமிட்டு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு கொலு பார்க்க வாருங்கள் என அழைப்பு விடுப்பார்கள் . நவராத்திரி கொண்டாடுவதில் குடும்பத்தில் பெரியவர் முதல் சின்னஞ்சிறுவர்கள் வரை அனைவர் பங்கும் உண்டு
நவராத்திரி காலத்தில் ஒவ்வொரு இரவிலும் 9 நாட்கள் 9 நவதானியங்களை படைத்து வழிபட வேண்டும்.
கோதுமை , பச்சரிசி , துவரை , பச்சைபயறு , கடலை ,
மொச்சை , எள்ளு , உளுந்து , கொள்ளு
விரதகாலங்களில் பாடப்படவேண்டிய பாடல்கள்
அபிராமி அந்தாதி , இலட்சுமி தோத்திரம் (கனகதார தோத்திரம்) , சகலகலாவல்லி மாலை , சரஸ்வதி அந்தாதி , மஹிஷசுரமர்த்தினி தோத்திரம்
அமாவாசைத் தொடர்பின்றி அதிகாலையில் பிரதமை வியாபித்திருக்கும் நாளே நவராத்திரி ஆரம்ப தினமாகும். மறுநாள் காலை பிரதமை அற்றுப் போய் விடுமாயின் முதல் நாளில் விரதம் ஆரம்பிக்க வேண்டும். பிரதமை தினத்தன்று தான் கும்பம் வைத்து பூஜை ஆரம்பிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக