செவ்வாய், 23 செப்டம்பர், 2014

மகாளய அமாவாசை!

நாளை (23.9.2014 )மகாளய அமாவாசை!

மகாளய அமாவாசை அன்று முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும்.

இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச் சிறந்த பலனை கொடுக்கும். எள் தானம் கோடி புண்ணியத்தை தரும் என்கிறது சாஸ்திரம். அத்துடன் புத்திரபாக்கியம் கிடைக்கும். கடன்தொல்லை,
மனக்கவலை, நவக்கிரக தோஷங்கள் போன்ற அனைத்து துன்பங்களும் விலகும்” என்கிறது புராணங்கள்.
கருடபுராணம், விஷ்ணு புராணம் போன்ற புராணங்களில், “ ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும். பசுவுக்கு அகத்திகீரை, பழங்கள் கொடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து முன்னோர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசிஇலையோ சமர்ப்பிக்க வேண்டும். துளசிவாசம் பெருமாளை சந்தோஷப்படுத்தும். இதனால் அந்த பித்ருக்களுக்கு விஷ்ணு பகவானின் பரிபூரண ஆசி கிடைக்கும். முன்னோர்கள் விஷ்ணுவின் ஆசி பெற்ற மகிழ்ச்சியில் தமது வம்சத்தினரையும் மனதார வாழ்த்துவார்கள்.

அத்துடன் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.

முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது சாஸ்திரம். அதனால்தான் பகீரதன், மாபெரும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு வரவழைத்து தம் முன்னோர்களை சாந்தப்படுத்தினான். நாமும் நம்மால் இயன்ற அளவு மகாளய அமாவாசை பூஜையும், தர்பணமும் முறையாக செய்து முன்னோர்களின் அருளாசி பெற்று சிறப்பான வாழ்வை பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக