வியாழன், 1 மே, 2014

திருக்கடையூர் குரு பார்வை பெற!



திருக்கடையூர் திருத்தலத்தில்....குரு பார்வை பெறலாம்..!

எமனிடம் இருந்து தப்புவதற்காக, திருக்கடையூர் திருத்தலத்தில், சிவலிங்கத் திருமேனியைக் கெட்டியாகத் தழுவிக்கொண்ட மார்க்கண்டேயனைத் தெரியும்தானே! 

அப்போது, எமதருமன் பாசக்கயிற்றை வீச... அது லிங்கத் திருமேனியிலும் விழவே சிவனார் ஆவேசமானதையும் அறிவோம், இல்லையா? 


அதுமட்டுமா?

எமதருமனின் பதவியைப் பறித்துச் சாபமிட்டார் சிவபெருமான்.

கௌசிகபுரி எனும் தலத்துக்கு வந்த எமதருமன், அங்கேயுள்ள நதியில் நீராடி, சிவபூஜை செய்து தவமிருக்க எண்ணினான்.

ஆனால், சிவபூஜை செய்வதற்கு விபூதி, வில்வம், ருத்ராட்சம் என ஏதுமின்றி, என்ன செய்வது எனக் கலங்கினான்.

பிறகு, நதியின் மணலையே எடுத்து சிவலிங்கமாக்கி, தவம் செய்து வழிபட்டான்;

வரம் பெற்று, இழந்த பதவியைப் பெற்றான்!

சிவனாருக்கும் அம்பாளுக்கும் நடுவே முருகப்பெருமான் சந்நிதி கொண்டிருப்பதால், இதனை சோமாஸ்கந்த அமைப்பு கொண்ட ஆலயம் என்றும் திருமண வரம் அருளும் திருத்தலம் என்றும் போற்றுகின்றனர், பக்தர்கள்!

ஆயுள் பலமும் பதவி உயர்வும் தந்தருளும் சிவனார் திருக்காட்சி தரும் இந்தக் கோயிலில், குரு ஸ்ரீதட்சிணாமூர்த்திதான் முக்கிய நாயகனாகத் திகழ்கிறார்.

எமதருமன் உண்டாக்கிய தண்டி தீர்த்தம் எனப்படும் காலப் பொய்கை ரொம்பவே விசேஷம்.

இந்தத் தலத்தில் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் செய்வது பூர்வ ஜென்ம புண்ணியம் என்றும் சந்ததியைக் குறைவின்றி வாழச் செய்யும் என்கின்றனர் பக்தர்கள்!

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர்

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.

சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மயிலாடுதுறை -தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது.

சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி. தொலைவில் சீர்காழி - நாகப்பட்டினம் சாலை வழியில் இத்தலம் உள்ளது.

அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் வாழ்ந்த தலமெனப்படுகிறது.

அபிராமி அந்தாதி பாடப்பட்டதும் இத்தலத்திலேயாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக