ஜீவ சமாதி
சனிக்கிரக தோஷம் நீக்கும்
ஸ்ரீசத்குரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள
இன்றைய காலகட்டத்தில் இருந்து சுமார் 35 வருடங்களுக்கு முன்னால் திருச்செந்தூர் கடற்கரையில் சூரசமஹாரம் நடக்கும் இடத்தில் முருகனின் ஜெயந்தி மண்டபத்திற்கு அருகில் சுமார் பத்திற்கும் மேல் சித்தர் சமாதிகள் உள்ளன. அவற்றில் கடைசியாக தென்னை மரங்கள் சூழ்ந்த சோலையின் நடுவில் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருந்தவர் தான ஸ்ரீசத்குரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள். . ஒரு மரத்தின் பொந்துக்குள்ளே சுவாமிகள் தியானநிலையில் அமர்ந்து இருக்கும் படம்ஒன்று என் மனக்கண்ணில் ஆழமாக பதிந்தது. இந்தப்படம் தான் பின்னாளில் என் உள்ளே பல மாற்றங்களை செய்து அவரைப் பற்றிய பல அரிய செய்திகளை உணரச் செய்தது.
சுவாமிகள் பெயரிலே அவரைப்பற்றிய முழுமையான தகவலும் அடங்கி உள்ளது. அவரை வணங்கினால் ஏவல், பில்லி சூனியம், எதிர்ப்பு, கோர்ட், கேஸ் வழக்குகள் மற்றும் சனிக் கிரஹத்தின் கொடிய தோஷங்களும் விலகி விடும்
சுவாமிகள் 1880ம் ஆண்டு நல்லமுத்து பொன்னம்மாள் தம்பதிகளுக்க திருச்சி மாவட்டம் வாதிரிப்பட்டியில் குழந்தையாக திருஅவதாரம் செய்தார்கள். பெற்றோர்கள் சுவாமிக்கு கனகசபாபதி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். சுவாமிகளுக்கு 1901ல் சொர்ணத்தம்மாள் என்ற பெண்மணிக்கும் திருமணம் நடந்து 3ஆண்டுகள் புதுச்சேரி நெல்லிகுப்பத்தில் குடும்பம் நடத்தினார்கள். பின்பு பொன்அமராவதி அரசுபபள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். இந்த சமயத்தில் சிதம்பரம் கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. திருச்சி மலைக்கோட்டையின் வடமேற்கு சரிவின் தரை தளத்தில் தெப்பக்குளத்தின் கிழக்குப் பக்கத்தில் அமைந்துள்ள நந்தி கோவில் தெருவில் அமைந்துள்ள நாகநாத சுவாமி கோவிலில் தவக்கோலத்தில் அமர்ந்திருந்த சுவாமிகளை 12 ஆண்டுகள் கழித்து உறவினர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டார். அதுமுதல் சுவாமிகள் சத்குரு சம்ஹாரமூர்த்தி சுவாமியாக அனைவராலும் அழைக்கபட்டார்கள். சில காலம் கழித்து சுவாமிகள் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிழமரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து வந்தார்கள். இந்த காலத்தில் சுவாமிகள் நடத்திக் காட்டிய அற்புதங்களும், அதிசயங்களும் ஏராளம் ஆகும். அவற்றை எல்லாம் எழுதினால் இக்கட்டுரை முடியாது. இவற்றில் சிகரம் வைத்தாற்போல் அமைந்த அதிசய செய்தியை மட்டும் இங்கு விவரிக்கின்றேன்.
குடுமியான்மலை குகையின் முன்னால் சுவாமிகள் ஒரு அத்திமரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருந்தார். அப்பொழுது மலைக்கு வடக்கே 7 கி.மீ. தொலைவில் உள்ள வீரப்பட்டி என்ற ஊரில் உள்ள அடர்ந்த காட்டில் அதிசயிக்கத்தக்க தன்மைகொண்ட மரம் ஒன்று இடிவிழுந்து கருகி பட்டு போயிருப்பதைத் தன் ஞானதிருஷ்டியால் அறிந்தார். மகிமை பொருந்திய அம்மரத்தின் பெயர் தான்றிமரம். இந்த மரத்திற்கும் நளமகாராஜனுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதை இங்குக் காண்போம்.
நளன் எல்லாவற்றையும் சனி தோஷத்தால் இழந்து சமையல்காரனாகவும், தேரோட்டியாகவும் வந்து தேரோட்டி சென்ற பொழுது ராஜாவின் அங்கவஸ்திரமான மேலாடை கீழே விழுந்து விட்டது. அதனை தேடி எடுக்க ரதத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கிய நளமகராஜன் தான்றி மரத்தின் மீது வஸ்திரம் இருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நான்கு திசைகளுக்கும் நான்கு கிளைகள் செல்வதைக் கண்டார். அதில் ஏறி வஸ்திரம் எடுக்கும்முன்பு மரத்தை ஒருமுறை சுற்றி வணங்கிவிட்டு அதில் ஏறினார். மரத்தில் நான்கு கிளைகளுக்கும் கிளைக்கு ஒன்றாக நான்கு கனிகள் இருந்தன. அதை பறித்து சாப்பிட்டபொழுது ஒவ்வொன்றும் ஒருவித சுவையாக இருந்தது. அவைகளை நளன் பறித்து சாப்பிட்ட பொழுது இனிப்பு சுவையை உடைய கனியைச் சாப்பிட்ட பொழுது அங்கு ஒரு அசரீரி வாக்கு ஒலித்தது. அசரீரியாக சனிபகவான் நளனிடத்தில் இந்த தலத்திற்கு வந்து தான்றி மரத்தை நீ வணங்கியதால் நான் உன்னிடம் விட்டு விலகிக் கொள்கிறேன். நீ குடும்பமாக வந்து திருநள்ளாறில் என்னை வழிபடு என்று அருளினார்.
இவ்வளவு சிறப்புப்பெற்ற நளமகாராஜனுக்கே சனி விலக செய்த இந்தத் தான்றி மரத்தின் சிறப்பை உலக மக்கள் அறியும்படி அதனை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று சுவாமிகள் எண்ணினார். சுவாமிகள் குடுமியான மலையை விட்டு நீங்கி தான்றி வனத்தை அடைந்தார். அங்கு பட்டுப்போயிருந்த தான்றி மரத்தை அடைந்தார்கள். இந்த மரத்தின் தூரில் உள்ள பொந்தினுள்ளே சுவாமிகள் அமர்ந்து தியானத்தைத் தொடங்கி விட்டார்கள். சுவாமியின் ஆணைப்படி அன்பர்கள் வெளியே அடிமரத்தையும் அவர் அமர்ந்துள்ள பொந்தையும் சுற்றி களிமண்ணைக் கொண்டு முழுமையாகப் பூசிவிட்டார்கள். சிறிது நாட்கள் கழித்து பட்டுப்போன அந்த மரம் மெல்ல தளிர்க்க தொடங்கியது. புரவி படர்ந்து பூத்துக் குலுங்கியது. இதனைக்கண்ட மக்கள் சுவாமியின் சக்தியைக் கண்டு போற்றி வணங்கினர். அதுபோல் சுவாமிகளின் புகழ் எல்லா ஊர்களிலும் பரவியது. இப்பொழுது மரம் மேலும் நன்கு தழைத்து பெரிய விருட்சமாக விளங்குகிறது. இதன் இலையை எடுத்து உண்டாலே பிணி விலகுகிறது.சனிக்கிரக தோஷம் முடக்கம் நீங்குகிறது.
அதன் பின்னர் சுவாமிகள் அங்கிருந்து திருச்செந்தூர் வைகாசி விசாகத்திற்கு தன் மனைவி சொர்ணத்தம்மாள் மற்றும் அன்பர்களுடன் போயிருந்தார்கள். விழா முடிந்த பின்பு தான் திருச்செந்தூரில் தங்க விரும்புவதானசும் மனைவியை அழைத்துக்கொண்டு அன்பர்களை ஊருக்கு கிளம்பி போகும்படி கட்டளையிட்டார்கள். பின்னர் 1938ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் தேதி புரட்டாசி 25ம் தேதி செவ்வாய்கிழமைபரணி நட்சத்திரத்தில் தான் முக்தி அடையப் போவதை தன் மனைவிக்கும் அன்பர்களுக்கும் தெரியப்படுத்தினார்கள். அந்த நாளும் வந்தது அன்று சுவாமிகள் அதிகாலையில் ஓங்காரநாதத்திற்கு அப்பனுக்கே பாடம் சொன்ன திருச்செந்திலாண்டவனுடன் ஒளி நிலை எய்தி ஒன்று கலந்தார்கள். அங்கு அழுது கொண்டே நின்ற சுவாமியின் துணைவியாரிடம் முருகப்பெருமானே ஒரு துறவியாக வந்து ஏன் அழுகிறாய்? இந்தா பிடி மண் இதைக் கொண்டு போய் தான்றி மரத்தில் நிலை நிறுத்து என்று அருளினார்.
அதன்படியே அத்திருத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து அந்த தலத்திற்கு தான்றீஸ்வரம் என்று பெயர் சூட்டப்பட்டது. இன்று தான்றீஸ்வரத்தில் சுவாமிகளின் திருஉருவப்படம் காட்சி தருகிறது. அன்று பட்டமரம் தழைத்த இந்த தான்றி மரப்பொந்தில் தான் சுவாமியின் ஆலயத்தில் இன்றும் மாதம் தோறும் பரணி, ஆயில்யம் ஆகிய நட்சத்திரத்திலும் பௌர்ணமி திதியிலும் அன்னதானங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் குரு பூஜையும் சிறப்பாக நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் திரளாக சுவாமியின் பக்த கோடிகள் சிறப்பாக பூஜைகளைச் செய்து வருகிறார்கள்.
என்னுடைய அனுபவத்தில் மாமியார் கொடுமைக்கு ஆளான மருமகள் எத்தனையோ பேர்கள் சுவாமியை வணங்கி நல்ல வாழ்க்கை அமையப்பெற்றார்கள். கோர்ட் கேஸ் விவகாரங்களில் உயிர் ஆபத்துக்களில் இருந்தும் நிவாரணம் பெற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சுவாமியின் அருளையும் கருணையையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களும் தங்களது வாழ்க்கை துன்பங்களில் விடுதலை அடைய வேண்டும் என்றே எழுதுகிறேன்.
இதை பலருக்கு தெரியும்படி செய்யவும்
பதிலளிநீக்கு