திங்கள், 28 ஏப்ரல், 2014

அமாவாசை வழிபாடு



அமாவாசை வழிபாடு
வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் `பிதுர் காரகன்' என்கிறோம். சந்திரனை `மாதுர் காரகன்' என்கிறோம். எனவே சூரியனும், சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபாடு தெய்வங்களாகும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பனவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர், சந்திரன் எமது மனதுக்கு திருப்தியானவர்.
இதனால் மகிழ்ச்சி தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பனவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரண தினங்களில் வழிபாடு செய்வர். அமாவாசை தினத்தில் அதிகாலை எழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதுர் தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. பிதுர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதுர்களின் தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.
ஏழைகளுக்கு தானம்.....
பிதுர்களுக்கு திதி கொடுப்பதை ஏதோ செய்யக் கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க சொல்லியுள்ளனர்.
முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந் நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மனநிறைவும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.
காகத்திற்கு உணவிடுங்கள்......
காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை.
காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்த பாறையில் தான் பிண்டம் வைத்து வணங்குவர். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.
புண்ணிய நதியில் நீராடல்......
முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம். அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும். சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் இவர் அருளைப் பூரணமாக பெறமுடியும்.
முன்னோரின் ஆசி.......
திருதயுகம், திரோதாயுங்களில் வருஷ திதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டனர். யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்ததால் இந் நிலை இருந்தது. ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதர் நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது.
துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய் விட்டனர். ஆனால் சூட்சும வடிவில் அவர்கள் நம்மை நேரில் பார்ப்பதாகவும், ஆசியளிப்பதாகவும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. ஒருவரின் வயிற்றில் பிறந்தால் மட்டும் பிள்ளையாகி விட முடியாது. பிள்ளைக்குரிய முழு தகுதியை ஒருவன் பெற வேண்டுமானால், வாழும் காலத்தில் பெற்றோரைக் கவனிப்பதோடு, இறப்புக்கு பிறகும் பிதுர் கடனை முறையாகச் செய்ய வேண்டும்.
சிரத்தையுடன் அதாவது அக்கறையுடன் செய்வதற்கு சிரார்த்தம் என்று பெயர். இறந்த பின்னும் நம் வாழ்வு தொடர்கிறது என்ற உண்மையை நமக்கு இக் கடமை நினைவூட்டுகிறது. இறந்த முன்னோர்களின் நற்கதிக்காகவும், அவர்களின் பூரண ஆசி வேண்டியும், சந்ததியினர் இக்கடமையைச் செய்கின்றனர். இச்சடங்கினைத் தீர்த்தக் கரையில் செய்வது வழக்கம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்து முடிப்பர்.சிரார்த்தம் கொடுக்கும் போது சொல்லும் மந்திரத்தின் பொருளைத் தெரிந்து கொண்டு சொல்லும் போது தானே நிச்சயம் பலன் கிடைக்கும். மனிதவாழ்வு இறப்புக்கு பின்னும் தொடர்கிறது என்ற உண்மையை உணர்ந்து செய்யும் போது இச்சடங்கு பொருளுடையதாகும். முன்னோரை வழிபடும் அமாவாசை முக்கியமானது. 

அமாவாசை நேரம் 12.55 pm (28-4-14) to 12.15 pm (29-4-14)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக