திங்கள், 28 ஏப்ரல், 2014

பூர்வஜென்ம புண்ணியம்




பூர்வஜென்ம புண்ணியம் என்பதை எதை வைத்து கணிக்கிறார்கள்?
பூர்வஜென்ம புண்ணியம் என்பதை எதை வைத்து கணிக்கிறார்கள்?
''நாம் இன்று செய்கிற புண்ணியச் செயல்களே மறுபிறவியில் நமக்கு நன்மையைத் தரும். இன்றே ஒரு நற்செயலை செய்து விட்டு, நாளையே அதற்குரிய பலன் கிடைத்துவிடுமென எதிர்பார்க்க முடியாது. நேற்று அன்னதானம் செய்த ஒருவருக்கு இன்று ஒரு சோதனை வந்து விடக்கூடும். ஐயையோ! நேற்று தானே தானம் செய்தோம். இன்று சோதனை வந்துவிட்டதே என்று புலம்புவது சரியானதல்ல. இது கடந்தபிறவியில் செய்த செயலுக்கான தண்டனை. இப்பிறவி புண்ணியம் ஆண்டவனின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும். அதற்குரியநற்பலனாகிய வட்டி அடுத்த ஜென்மாவில்கிடைக்கும்.''

குலதெய்வ வழிபாடு




குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும்.
இன்று ஒவ்வொரு வீடுகளும் நல்ல முறையில் இருப்பதில்லை அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. துர்சக்திகளின் ஆதிக்கத்தில் வீடுகள் இருப்பதால் அவ்வாறு இருக்கின்றன. பல பேர் வீட்டில் குலதெய்வத்தின் அருள் இருப்பதில்லை. அவர்கள் நல்ல முறையில் தெய்வ வழிபாடு செய்தாலும் பலன் இருப்பதில்லை.
பங்காளிகளாக சேர்ந்து ஒரு தெய்வத்தை வணங்கிவரலாம். இப்படி பங்காளிகள் வணங்கினாலும் ஒருவருக்கு மட்டுமே அந்த குலதெய்வம் அனைத்தையும் வழங்கிக்கொண்டிருக்கும். பலர் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். இந்த நிலை எதனால் ஏற்படுகிறது என்றால் குலதெய்வத்தில் இருந்து சம்பந்தப்பட்ட நபர் மண் எடுத்து வந்து அதனை பூஜை செய்து அவர்களின் பக்கமாக இதனை திருப்பிவிடுவார்கள். இது இப்பொழுது இல்லை என்றாலும் ஒரு சில இடங்களில் இது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.
உங்களின் தெய்வம் அசைவம் வைத்து படைக்கும் தெய்வமாக இருந்தால் தாராளமாக அதனை செய்யுங்கள்.நமது முன்னோர்களின் வழியை நாம் மாற்றவேண்டாம்.
பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும். இல்லை என்றால் கண்டிப்பாக கிடைக்காது.
குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.

முருகனுக்கு காவடி



முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா .........

தமிழ்க் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பதுதான். இந்தக் காவடி எடுப்பதன் காரணம் தெரியுமா? அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து , தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார். அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலைச் சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க , காவடியாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். முருகன் இவ்விரு கிரிகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்யவும் , இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.

இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது, முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை ஆவினன் குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார். இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.

ஆனால் அந்த சிறுவன் இந்த மலை 'தனக்கே சொந்தம்' என்று உரிமை கொண்டாட, கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேறற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான். இதைக் கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது முருகன், இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார். அப்போது முதல் முருகனுக்கு இந்த காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது என்று ஆன்மீகவாதிகள் சொல்கிறார்கள்.

தர்ப்பைப் புல்



தர்ப்பைப் புல்

இந்து சமயத்தில் அனைத்து வைதீகச் சடங்குகளுக்கும் தர்ப்பைப் புல்லைப் பயன்படுத்துகிறார்கள். இதன் பின்னனியாவது,

மனிதனின் ஆத்மா என்பது வித்து இல்லாமல் ஏற்பட்டது என்பதை ஒப்புக் கொள்ளும் விதமாக இந்து சமயத்தில் வித்தே இல்லாமல், அதாவது விதை போடாமல் முளைத்து வளர்கின்ற தர்ப்பைப் புல்லைச் சடங்குளுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

அஷ்டமி அஷ்டலட்சுமி




அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமில் அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லாநாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை .

நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட,அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும்.

தை------------(01-02)- தேவதேவாஷ்டமி
மாசி-----------(02-03)- மகேஸ்வராஷ்டமி
பங்குனி------(03-04)- த்ரயம்பகாஷ்டமி.
சித்திரை------(04-05)- ஸநாதனாஷ்டமி
வைகாசி-----(05-06)- சதாசிவாஷ்டமி
ஆனி----------(06-07)- பகவதாஷ்டமி
ஆடி------------(07-08)- நீலகண்டாஷ்டமி
ஆவணி------(08-09)- ஸ்தாணு அஷ்டமி
புரட்டாசி-----(09-10)- சம்புகாஷ்டமி
ஐப்பசி---------(10-11)- ஈஸ்வராஷ்டமி
கார்த்திகை--(11-12)- ருத்ராஷ்டமி
மார்கழி-------(12-01)- சங்கராஷ்டமி

அமாவாசை வழிபாடு



அமாவாசை வழிபாடு
வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் `பிதுர் காரகன்' என்கிறோம். சந்திரனை `மாதுர் காரகன்' என்கிறோம். எனவே சூரியனும், சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபாடு தெய்வங்களாகும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பனவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர், சந்திரன் எமது மனதுக்கு திருப்தியானவர்.
இதனால் மகிழ்ச்சி தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பனவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரண தினங்களில் வழிபாடு செய்வர். அமாவாசை தினத்தில் அதிகாலை எழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதுர் தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. பிதுர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதுர்களின் தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.
ஏழைகளுக்கு தானம்.....
பிதுர்களுக்கு திதி கொடுப்பதை ஏதோ செய்யக் கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க சொல்லியுள்ளனர்.
முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந் நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மனநிறைவும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.
காகத்திற்கு உணவிடுங்கள்......
காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை.
காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்த பாறையில் தான் பிண்டம் வைத்து வணங்குவர். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.
புண்ணிய நதியில் நீராடல்......
முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம். அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும். சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் இவர் அருளைப் பூரணமாக பெறமுடியும்.
முன்னோரின் ஆசி.......
திருதயுகம், திரோதாயுங்களில் வருஷ திதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டனர். யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்ததால் இந் நிலை இருந்தது. ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதர் நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது.
துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய் விட்டனர். ஆனால் சூட்சும வடிவில் அவர்கள் நம்மை நேரில் பார்ப்பதாகவும், ஆசியளிப்பதாகவும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. ஒருவரின் வயிற்றில் பிறந்தால் மட்டும் பிள்ளையாகி விட முடியாது. பிள்ளைக்குரிய முழு தகுதியை ஒருவன் பெற வேண்டுமானால், வாழும் காலத்தில் பெற்றோரைக் கவனிப்பதோடு, இறப்புக்கு பிறகும் பிதுர் கடனை முறையாகச் செய்ய வேண்டும்.
சிரத்தையுடன் அதாவது அக்கறையுடன் செய்வதற்கு சிரார்த்தம் என்று பெயர். இறந்த பின்னும் நம் வாழ்வு தொடர்கிறது என்ற உண்மையை நமக்கு இக் கடமை நினைவூட்டுகிறது. இறந்த முன்னோர்களின் நற்கதிக்காகவும், அவர்களின் பூரண ஆசி வேண்டியும், சந்ததியினர் இக்கடமையைச் செய்கின்றனர். இச்சடங்கினைத் தீர்த்தக் கரையில் செய்வது வழக்கம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்து முடிப்பர்.சிரார்த்தம் கொடுக்கும் போது சொல்லும் மந்திரத்தின் பொருளைத் தெரிந்து கொண்டு சொல்லும் போது தானே நிச்சயம் பலன் கிடைக்கும். மனிதவாழ்வு இறப்புக்கு பின்னும் தொடர்கிறது என்ற உண்மையை உணர்ந்து செய்யும் போது இச்சடங்கு பொருளுடையதாகும். முன்னோரை வழிபடும் அமாவாசை முக்கியமானது. 

அமாவாசை நேரம் 12.55 pm (28-4-14) to 12.15 pm (29-4-14)

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

உங்கள் லக்னத்திற்குரிய தெய்வம் தெரியுமா?






உங்கள் லக்னத்திற்குரிய தெய்வம் தெரியுமா?
ஒருவரது ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். அதில் ல/ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ராசிக்கட்டம் தான் லக்னம். உதாரணத்துக்கு இந்த படத்தைப் பாருங்கள். ல/ என்று குறிப்பிடப்பட்டுள்ள கட்டத்தில் புதன் இருக்கிறது. அதாவது, கன்னியில் புதன் உள்ளது. இவர் கன்னி லக்னக்காரர். இவருக்குரிய தெய்வங்கள் பெருமாள், ராமன், கிருஷ்ணர். லக்னத்தில் சூரியன் இருந்தால், சூரிய நாராயணர், சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தால் மகாலட்சுமி, பாலா, திரிபுரசுந்தரி உள்ளிட்ட அம்பிகையர், செவ்வாய் இருந்தால் முருகன், லட்சுமி நரசிம்மர், துர்க்கை, குரு இருந்தால் சிவன், தட்சிணாமூர்த்தி, பெருமாள், சனி இருந்தால் வெங்கடாஜலபதி, சாஸ்தா (ஐயப்பன்), யோக நரசிம்மர், ஆஞ்சநேயர், கேது இருந்தால் விநாயகர் அல்லது ராமானுஜர் போன்ற ஆச்சாரியர்களைத் தரிசிக்க வேண்டும். இந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்களைத் தினமும் ஜபிப்பது பலனை அதிகரிக்கும்.

கலசம் என்பது என்ன?



கலசத்தை பூஜிப்பது ஏன் ................

கலசம் என்பது என்ன? 

மண் அல்லது செம்பு, பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நீர் நிறைந்த ஒரு பாத்திரம் - செம்பு - சிறுபானைதான் கலசம் எனப்படுகிறது. இந்தக் கலசத்தில் மாவிலைகள் செருகப்பட்டு, அவற்றின் நடுவில் ஒரு தேங்காய் வைக்கப்படும். வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல்கள் பானையின் கழுத்திலிருந்து முழுமையாக டயமண்ட் வடிவத்தை உரு வாக்கும் வகையில் நுணுக்கமாகக் கட்டப்படுகிறது. பானையின் மேல் அழகான வடிவங்கள் வரையப்படுவதும் உண்டு. இந்தப் பானை கலசம் என்றழைக்கப்படுகிறது. இது நீரினாலோ அல்லது அரிசியினாலோ நிரப்பப்படும். இது பூர்ண கும்பம் என்றழைக்கப்படுகிறது.

இது போன்றே ஜடப்பொருளான நமது உடல் தெய்வீகமான சக்தியால் உயிர்பெறும் பொழுது அற்புதமான, போற்றத்தக்க செயல்களை செய்யக்கூடியதாக மாறுகிறது
மரபுப்படி நடத்தப் பெறும் கிருகப் பிரவேசம், திருமணம், தினசரி பூஜைகள் போன்ற சமயங்களில் இத்தகைய கலசம் வைக்கப்படுகிறது. மேலும், விழா நடத்தப்படும் இடத்தின் நுழைவாயிலில், வருவோரை வரவேற்கும் வகையில் இக்கலசத்தை வைக்கிறார்கள். பெரியோர்களையும் முக்கியப் பிரமுகர்களையும் பூரண கும்பம் கொடுத்து வரவேற்பது மரபு.


பூஜிப்பது ஏன்? 

உலகைப் படைக்கும் முன் பகவான் விஷ்ணு, பாற்கடலில் பாம்பணையின் மேல் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தார். அவருடைய நாபிக் கமலத்திலிருந்து ஒரு தாமரை வெளிப்பட்டது. அந்த மலரிலிருந்து படைப்புக் கடவுளான பிரம்மா தோன்றினார். பிரம்மாவே உலகத்தை சிருஷ்டித்தார். கலசத்தில் உள்ள நீரானது, எந்த நீரிலிருந்து படைப்பில் உள்ள அனைத்தும் தோன்றியதோ, அந்த நீரைக் குறிக்கிறது. அந்தப் புனித நீர்தான் அனைத்திற்கும் உயிர் அளிக்கும் சக்தி படைத்தது. இந்த நீர் எண்ணிலடங்கா உருவங்களையும் வடிவங்களையும் உயிர்த் துடிப்பும் உணர்வும் உள்ள பொருள்கள் மற்றும் ஜடப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் படைக்கும் சக்தியைத் தன்னுள் அடக்கியுள்ளது. 

மேலும், உலகில் உள்ள மங்களகரமான அனைத்தையும் படைக்கும் சக்தியையும் பெற்றது, இது. கலசத்தில் உள்ள இலைகளும் தேங்காயும் சிருஷ்டியைக் குறிக்கின்றன. கலசத்தைச் சுற்றியுள்ள நூல் படைப்பில் உள்ள அனைத்தையும் ஒன்றாகப் பிணைக்கும் அன்பைக் குறிக்கிறது. ஆகவேதான் கலசம் புனிதமாகக் கருதப்பட்டு பூஜிக்கப்படுகிறது. புனிதமான நதிகளின் நீர், அனைத்து வேதங்களின் சாரம் மற்றும் அனைத்து தேவதைகளின் ஆசி ஆகியவை கலசத்தில் உள்ள நீரில் வந்து சேரவேண்டுமென்று பிரார்த்திக்கப்படுகிறது. பின்னர், கலச நீர் அபிஷேகத்திற்கும் மற்ற சடங்குகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

ஆலய கும்பாபிஷேகத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலசத்தில் உள்ள புனித நீர் ஆலய கோபுரக் கலசங்களின் மேல் ஊற்றப்படுகிறது. அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அமுத கலசத்தை ஏந்தியவாறு இறைவன் தோன்றினார். இவ்வமுதம் அனைவருக்கும் இறவாவரத்தை அருளியது. எனவே, கலசமும் இறவாத் தன்மையைக் குறிக்கிறது. ஞானியர் என்போர் நிறை மனிதர்கள். இதற்குக் காரணம் அவர்கள் தங்களுடைய உண்மை சொரூபம், பூர்ணமான - எங்கும் நிறைந்த - பேருண்மையேயன்றி வேறில்லை என்பதை நன்கு உணர்ந்தவர்கள். 

அவர்கள் என்றும் குறைவற்ற மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்து விளங்குகின்றனர். உலகில் உள்ள மங்களகரமான அனைத்தையும் குறிப்பவர்களாக அவர்கள் விளங்குகின்றனர். அந்த நிறை மனிதர்களின் பெருமையைப் போற்றும் வகையில் பூர்ணகும்பத்துடன் அவர்கள் வரவேற்கப்பட்டனர். இது அவர்களிடத்து நமக்கு உள்ள பக்தி நிறைந்த மரியாதையை நாம் முழுமனதுடன் வெளிப்படுத்துவதன் அடையாளமாகும்.

ஜபம் செய்வது எப்படி ?


ஜபம் செய்வது எப்படி ?
எண்ணிக்கை_ பொதுவாக ஒரு குரு தனது சீடனைத் தினந்தோரும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மந்திரத்தை ஜபம் செய்யும்படி உபதேசிக்கிறார். ஜபத்தை எண்ணிக் கணக்கிடுவதை விரல்களின் மூலமாகச் செய்யலாம்: அல்லது ஒரு ஜப மாலையைக் கொண்டு செய்யலாம்: அல்லது மனதிற்குள்ளேயே செய்யலாம். ஜபமாலை சாதகனின் மனதை ஒரு முகப்படுத்துவதற்கு உதவி செய்கிறது.
ருத்ராக்ஷம், சந்தனம், இலந்தை தாமரைக்கிழங்கு, ஸ்படிகம், பவழம், தாமரை மணி, துளசிமாலை போன்றவற்றால் ஆன பலவித ஜப மாலைகள் இருக்கின்றன. ஒரு சிலர் மனித அல்லது விலங்குகளின் எழும்புகளான ஜபமாலைகளையும் உபயோகிக்கிறார்கள். {அமானுஷ்ய சக்தி விரும்புகிறவர்களுக்கு மனித அல்லது விலங்குகளின் எழும்புகளை உபயோகிப்பார்கள்.}
ஜபிக்கும் மந்திரத்தைப் பொருத்தே உபயோகிக்கும் ஜபமாலையும் அமைகிறது. ஜபமாலை 108, அல்லது 54 மணிகளைக் கொண்டதாகும்.
ஒருவர் உபயோகிக்கும் ஜபமாலையை அவரைத் தவிர வேறு எவரும் உபயோகிக்க கூடாது.
மேலும் சாதகன் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தையே ஒரு மாலையின் மூலம் ஜபிக்க வேண்டும். ஒரே மாலையில் மூலம் வெவ்வேறு மந்திரங்களை ஜபிக்க கூடாது.
ஒரு மந்திரத்தை ஒருவன் ஒரு லட்சம் முறை ஜபித்தால் அந்த மந்திரம் சேதனமாக {உயிருள்ளதாக} ஆகிவிடுகிறது. ஜபம் செய்த மந்திரத்தை 10. ஒரு பங்கு யாகமாகவும், அர்க்யமாகவும் செய்ய அந்த குறிப்பிட்ட மந்திரம் முழு பலத்தை பெற்று விடும்.
நல்ல ஊக்கத்தோடு ஒருவன் ஒரு மந்திரத்தை சரியான உச்சரிப்பில் ஒரு முறை ஜபித்தாலும் அவனது மனம் தூய்மையடைந்துவிடுகிறது என்று ஜப விதானம் என்ற நூல் கூறுகிறது.
இதை பற்றிய பல விஷயங்களை முன்பே கூறிவிட்டபடியால் அடுத்த விஷயத்திற்கு வருவோம்.
இடங்கள்.._ இறைவனைப் பற்றி நினைக்க விரும்பாதவர்கள் இருக்கும் இடங்கள், எங்கு புனிதமான மனிதர்கள் கௌரவிக்கப்படுவதில்லையோ, எந்த இடத்தில் மனிதர்கள் ஈகையிலும் எளிய வாழ்க்கையிலும் விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்களோ, அந்த இடங்கள் ஜபம் பழகுவதற்கு ஏற்றவையல்ல. மாறாக, அவை பிரதிகூலமான பலனை தருபவை.
நேரம் – தினந்தோரும் நாம் குறிப்பிட்ட நேரங்களிலேயே ஜபம் செய்ய வேண்டும். அப்படி செய்து வந்தோமானால் நம் மனதிலும் அந்த நேரங்களில் ஜபம் செய்வதற்குரிய தகுந்த மாற்றங்களும் ஏற்படுகின்றன. நமது மனதுக்கும், உடலுக்குமிடையே ஒரு சரியான நல்ல இணைப்பு ஏற்படுகிறது.
அது எது போன்றதென்றால், நாம் தினந்தோரும் ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே உணவு உட்கொள்ளுகிறோமென்றால், அந்த நேரம் வந்தவுடன் நமக்குப் பசியும் தானாகவே தோன்றுகிறதல்லவா? ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் தூங்கச் செல்கிறோமென்றால், அந்த நேரம் வந்தவுடன் நமக்குத் தூக்கமும் வந்துவிடுகிறதல்லவா? அது போன்றுதான் நாம் குறிப்பிட்ட நேரங்களில் ஜபம் செய்வதென்பதுமாகும். அந்த நேரம் வந்தவுடன் நமது மனமும் ஜபம் செய்ய நம்மைத் தூண்டும்.
இவ்விதம் குறிப்பிட்ட நேரங்களில் தவறாமல் ஜபம் பழகுவதால் – நமது மனதின் ஆற்றல்கள் வளர்ந்து வலுப்பெற்று – நாம் நல்ல ஆன்மீக முன்னேற்றமும் காண முடிகிறது.
விடியற்காலை, நண்பகல், மாலை சந்தியாகாலம், நடு இரவு ஆகியவை ஜபம் செய்வதற்குரிய மிகவும் விசேஷமான காலங்கள்.
இவற்றைத் தவிர பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி, ஏகாதசி திதிகளோடு கூடிய நாட்கள், மற்ற விஷேச பூஜை தினங்கள் மற்றும் கிரஹண காலங்கள், ஆகியவை ஜபம் செய்வதற்கு மிகவும் சிறந்தவையாகும்.
உச்சரிப்பு – புனித மந்திரமானது தெளிவாக உச்சரிக்கப்பட வேண்டும். இதை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். ஒரு எழுத்து மாறினாலும் அல்லது த்வனியில் {சத்தம்} ஏற்றம்,குறைவு இருந்தாலும் பிரதினுகூலம் {எதிர்மறை} பலன்கள் தந்துவிடும்.
நாம் ஜபம் செய்யும்போது நமது உடல், மனம், ஆன்மா, நினைவு முழுவதும் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்தே செயல்பட வேண்டும்.
பெரும்பாலும் நமது வாய் மந்திரத்தை ஜபம் செய்கிறது. ஆனால் நமது மனமோ அதில் ஈடுபாடில்லாமல் தனித்து நிற்கிறது. அவை இரண்டும் இணைந்தாலும், நமது ஆன்மா {நினைவு முழுவதும்} அதில் விருப்பமில்லாமல் ஒதுங்கிவிடுகிறது. ஆனால் இவை மூன்றும் இணைந்தாலோ மந்திரம் நமது உள்ளத்தின் ஆழமான அடுக்குகளிலிருந்து எழும்புவதை நாம் அறியலாம். அந்தச் சமயத்தில் புனித மந்திரத்தால் ஏற்படும் தெய்வீக அதிர்வுகள் நமது உடலில் ஏற்படுத்தும் அது பேரானந்த நிலையை நமக்குள் தோற்றுவிக்கும். வார்த்தையால் விவரிக்க முடியாத பேரின்ப நிலை நமக்கு கிடைக்கும்.

சுவாமி சாப்பிடுவாரா ............


நிவேதனத்தை சுவாமி சாப்பிடுவாரா ............
கிருஷ்ண ஜெயந்தி வந்தால் சீடை, முறுக்கு என சுவாமிக்கு வைக்கிறோம். இதையெல்லாம் பார்க்கும் சிலர் கேலியாக, சுவாமியா சாப்பிடுகிறார், அவர் பெயரைச் சொல்லி நீங்கள் சாப்பிடுகிறீர்கள், என கேலி செய்வர். இவ்வாறு கேலி செய்பவர்களிடம் சற்றும் கோபப்பட நமக்கு உரிமையில்லை. ஏனெனில், அவர்கள் உண்மையைத் தான் சொல்கிறார்கள். நிவேதனம் என்பதன் பொருளை அறியாமல் அவர்கள் பேசினாலும் நிஜம் அது தான். நிவேதனம் என்றால் சுவாமியை சாப்பிட வைத்தல் என்பது பொருள் அல்ல. அறிவித்தல் என்று அர்த்தம். இறைவா! இந்த சமயத்தில் எனக்கு இந்த உணவை உண்ணத்தந்து உயிர் காத்த உனக்கு நன்றி தெரிவிக்கிறேன், என்று அறிவிப்பதே நிவேதனமாகும். சுவாமியின் முன்னால் இலைபோட்டு விழா நாட்களில் மட்டுமே நிவேதனம் செய்கிறோம். இதை தினமும் செய்யலாம். நம் வீட்டில் அன்றாடம் சமைக்கும் வெள்ளை அன்னத்தை சுவாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு, அவரது நினைவோடு சாப்பிட்டால் உடலும் சுத்தமாகும், உள்ளமும் சுத்தமாகும். நோயில்லா வாழ்வு அமையும்