வியாழன், 23 அக்டோபர், 2014

கந்த சஷ்டி விரதம்

கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி :
சென்ற பதிவின் தொடர்ச்சி
கந்த புராணம் கூறும் விரத முறை
சஷ்டி விரதமிருப்பவர் ஆறு நாட்களும் காலையில் நீரில் மூழ்கி, சந்தியாவந்தனம் முடித்துத் தியானத்தில் அமர்ந்து, அக்கினி, கும்பம், பிம்பம் மூன்றிலும் முருகனை எழுந்தருளச் செய்து வழிபடவேண்டும். திருமுருகன் புகழ்பாடி குளிர்ந்த நீர் பருகி உபவாசம் இருத்தல் வேண்டும். பெண்ணாசையை மறந்தும், பகலில் தூங்காமலும் இருத்தல் வேண்டும்.
நடைமுறை எளிய விரத முறை
விரத நாளான பிரதமை திதி அன்று அதிகாலை நீராடி சுத்தமான ஆடை அணிந்து முருகன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு காப்பு அணிவதுடன் விரதம் ஆரம்பிக்கப்படல் வேண்டும்
காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடி , காலை, மாலை வழிபாட்டின் போது அவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ / கேட்கவோ செய்ய வேண்டும்.
மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். வயோதிகர்கள், நோயாளிகளுக்கு இதில் விதிவிலக்கு உண்டு.
உப்பு நீர் , எலுமிச்சம் பழச்சாறு, நார்த்தம்பழச்சாறு, இளநீர் போன்றவை அருந்துவதும் அறவே கூடாது.
இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஏழாம் நாள் அதிகாலை நீராடி முருக வழிபாட்டினை மேற்கொண்டு அடியவர்களுக்கு அன்னதானம் செய்த பின் தானும் உண்டு பாரணையுடன் விரதத்தினை சிறப்புடன் முடிக்க வேண்டும் .
விரத நாட்கள் முழுவதும் வீட்டில் தூய்மை காக்க வேண்டும். கடுமொழி, தகாத மொழி பேசுவது கூடாது. தாம்பத்திய உறவை துறக்க வேண்டும். முருகன் திருஉருவத்தை தியானம் செய்ய வேண்டும்.
இந்த 6 நாட்கள் விரதத்தின் போது, " சரவண பவ " எனும் ஆறெழுத்து மந்திரத்தையும், சஷ்டி கவசத்தையும் படித்து வருவோருக்கு முன் வினைகள் நீங்குவதோடு, இல்லத்தில் ஐஸ்வரியமும், மகிழ்ச்சியும் ஓங்கும் என்பது கந்த புராணம் சொல்லும் செய்தி
குறிப்பு : திருசெந்தூர் முருகனை ஆறு கரங்களுடன் இந்த நாட்களில் மட்டுமே காண முடியும் . மற்ற நாட்களில் இந்த கரங்கள் துணியால் மூடப்பட்டு இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக