ஞாயிறு, 11 ஜனவரி, 2015

முருகனின் 16 கோலங்கள்




முருகனின் 16 வகை கோலங்கள்

1. ஞானசக்திதரர்: இந்த முருகனை வழிபட்டால் 


நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். 

திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் 

மூலவர் திருவடிவம் `ஞானசக்திதரர்' 

திருக்கோலமாகும். 
2.கந்தசாமி: இவரை வழிபட்டால் சகல 

காரியங்களும் சித்தியாகும். பழனிமலை 

ஆண்டவர் திருவடிவம் இது. 


3. ஆறுமுக தேவசேனாபதி: இவரை வழிபட்டால் 


மங்களகரமான வாழ்வு கிடைக்கும். 

சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் 

கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் 

உள்ளது.


4. சுப்பிரமணியர்: இவர் தன்னை வழிபடும் 


பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் 

பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை 

மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் 

கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.


5. கஜவாகனர்: இவரை வழிபட்டால் துன்பங்கள் 


விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் 

நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய 

இடங்களில் யானை மீதிருக்கும் இவரது 

திருவுருவம் உள்ளது.


6.சரவணபவர்: தன்னை வழிபடும் 


அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, 

சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை 

அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய 

இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.


7. கார்த்திகேயர்: இவரை வழிபட்டால் சகல 


சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை 

நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது 

விஷேசமான பலன்களைத் தரும். 

கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் 

கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் 

கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் 

உள்ளது.

8. குமாரசாமி: இவரை வழிபட்டால் ஆணவம் 

அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் 

இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் 

உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் 

இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.


9. சண்முகர்: இவரை வழிபட்டால் சிவசக்தியை 


வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் 

உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் 

திருவடிவமாகும்.



10. தாரகாரி: `தாரகாசுரன்' என்னும் அசுரனை 

அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு 

நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் 

இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் 

இது. 

விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் 

தாரகாரி இருக்கிறார்.


11. சேனானி: இவரை வழிபட்டால் பகை 


அழியும். 

போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை 

நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி 

திருவுருவம் இருக்கிறது.


12. பிரம்மசாஸ்தா: இவரை வழிபட்டால் எல்லா 


வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். 

சகலவித கலையறிவும் அதிகரிக்கும். 

கல்வியில் 

தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள 

குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி 

ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா 

திருக்கோலம் 

உள்ளது.


13. வள்ளிகல்யாணசுந்தரர்: இவரை வழிபட்டால் 


திருமணத்தடைகள் விரைவில் அகலும், 

கன்னிப் 

பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் 

கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் 

தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.


14. பாலசுவாமி: இவர், உடல் ஊனங்களையும், 


குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை 

வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். 

திருச்செந்தூர், திருக்கண்டிïர், ஆண்டாள் கும்பம் 

கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் 

இருக்கிறது.


15. சிரவுபஞ்சபேதனர்: இவரை வழிபட்டால் 


துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். 

திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி 

ஆகிய இடங்களில்இவரது திருவுருவம் உண்டு.



16. சிகிவாகனர்: மயில் மீது இருக்கும் முருகன் 

அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற 

அமையும் திருவடிவம். தன்னை 

வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு 

அளிப்பவர் இவர்.

புதன், 7 ஜனவரி, 2015

சதுரகிரி



சதுரகிரியும், திருவண்ணாமலையும், எத்தனை முறை சென்றாலும் , ஒவ்வொரு முறையும் அதன் பிரம்மாண்டத்தை உணர்த்துவதில் தவறியதே இல்லை.

இன்று மகாலிங்க மலையைப் பற்றி - நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.

திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்க

தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்

* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர்.

*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.
*ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.




* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.

*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.

*மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது.
* சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.

* ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.

* சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.

இருப்பிடம்:
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.

அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.

அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.

திறக்கும் நேரம்:
காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.போன்: 98436 37301, 96268 32131

மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.

சதுரகிரி தல வரலாறு : சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.

வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.

சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும்.
மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.

இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.

இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.

கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.

இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.

இரட்டை லிங்கம்: ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.

""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.

பிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார்.

வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.

பெரிய மகாலிங்கம்: நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

தவசிப்பாறை: மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது.
[p91a.jpg]

தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.

சுந்தரமூர்த்தி

கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

பார்வதி பூஜித்த லிங்கம் : சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்

இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.

இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.

லிங்க வடிவ அம்பிகை

சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

சதுரகிரியில் தீர்த்தங்கள்
சந்திர தீர்த்தம்

சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.

கெளண்டின்னிய தீர்த்தம்.

சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.

கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும் உண்டு.




சந்தன மகாலிங்கம் தீர்த்தம்.

இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.

இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.

இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய 'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.

காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட 'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக்
காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட 'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்' போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.

பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.




அபூர்வ மூலிகைகள் :

இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.

பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.

தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது.

இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்' என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.

விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக
பயன்படுத்த வேண்டும்.

சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.

இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.

அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு.




இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில்
வந்து ஒட்டிக்கொள்ளும்.

இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.

சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.

இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.




இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் - " மதி மயக்கி வனம்" என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நான் கேள்விப்பட்ட வரை , எங்கள் அருகில் இருக்கும் கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். "மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து" என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும் கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.

இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். ஏற்கனவே நாம் " கட்டை விரல் அளவில் காட்சி தந்த சித்தர் பற்றிய பதிவை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம். இவை அத்தனையும் சர்வ நிஜம். இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் - மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும்.




உங்கள் தேடல் , பக்தி உண்மை எனில் - நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால் , இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை..

சதுரகிரி மலை - ஒரு ஆன்மிக உலா

சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.

சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.





சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களின் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி இங்கு வருகின்றனர்


வெள்ளி, 2 ஜனவரி, 2015

27 நட்சத்திரங்களும் சித்தர்களும் !!!



27 நட்சத்திரங்களும் சித்தர்களும் !!!

* அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி

* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி

* கார்த்திகை1(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி

* கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.

* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்,
ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்

* மிருகசீரிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்.

மிருகசீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம். ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில்.

மிருகசீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில்.

மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.

* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திருஅண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம்.

* புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீஸ்வரன்கோவில்,

புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.

* பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி,திருவாரூர் (மடப்புரம்)

* ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.

* மகம் (சிம்மம்), ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.

பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.

* உத்திரம்1(சிம்மம்)= ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்.

உத்திரம் 2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்;

* உத்திரம் 3 = ஸ்ரீகரூவூரார் – கரூர் பசுபதீஸ்வரர் கோவில்

* உத்திரம் 4 = ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் – தஞ்சாவூர்.

* அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் – கரூவூர், ஸ்ரீகரூவூரார் – கரூர்.

* சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடுவிலார்ப்பட்டி.

சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்

* சுவாதி (துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்

* விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை

விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் – நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்

* அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.

* கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.

* மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்

* பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிகளார் – பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் – ஆவுடையார்கோவில்.

* உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் – திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)

* உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் – திருப்பதி

* திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் – நெரூர், ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.

* அவிட்டம்1,2 (மகரம்); அவிட்டம் 3,4 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).

* சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.

* பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி – திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் – திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் – பந்தனம்திட்டா.

பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.

* உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன்றம்.

* ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.

வியாழன், 1 ஜனவரி, 2015

வைகுண்ட ஏகாதசி



வைகுண்ட ஏகாதசி(01.01.2015)

மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.

ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

தென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர். விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி)இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.

ஏகாதசியன்று இறந்தால் முக்தி கிடைத்துவிடுமா?

வைகுண்டம் நல்லவர்களின் காலடி பட்டவுடன் திறந்து கொள்ளும். ஏகாதசி திதியில் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விட முடியாது. ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். கிராமங்களில் மக்கள் இன்று வைகுண்ட ஏகாதசி. இன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. இவர் பெருமாளின் பாதத்தில் போய் சேர்ந்து விட்டார், என்பதற்கு வேறு காரணம் உண்டு. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி என்பர்.

ஏகாதசியன்று செய்யக்கூடாதது: ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.

ஏழு பிரகாரம்: இந்தியாவிலேயே ஏழு பிரகாரங்களைக் கொண்ட கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மட்டுமே. இந்தப் பிரகராங்களின் வாசல் சுவர்களின் நடுவில் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக முதன்மை வாசல் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். ஆனால், இங்கு தெற்கு நோக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோயிலின் பரப்பு 6 லட்சத்து 31 ஆயிரம் சதுரஅடி. அதாவது 156 ஏக்கர். ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டதற்கு காரணம் உண்டு. உடலின் நடுவே ஆத்மா <உள்ளது போல, கோயிலின் நடுவே பரமாத்மா இருக்கிறார். மனித உடல் ஏழு தாதுக்களால் ஆனதாகச் சொல்வதுண்டு. இதன் அடிப்படையிலேயே ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டது.

துவாதசிக்கு அகத்திக்கீரை: வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை பாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் (தென்மாவட்டங்களில் 21 கறி வைப்பார்கள்) உணவு தயாரிக்க வேண்டும். சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும். அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை. இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.

ஏகாதசி விரத முறை: கயிலைநாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரதமகிமையை எடுத்துச் சொன்னார். பார்வதி! ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார். உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே, அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக வைகுண்ட ஏகாதசி விரதம் பலர் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும்விரதம் இருக்கவேண்டும்.

மறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர். மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது இருபத்தைந்தாவது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதமிருப்பவர்களுக்கு முக்கோடி (அளவற்ற) பலன்களைத் தருவதால், முக்கோடி ஏகாதசி (பேச்சு வழக்கில் முக்குட்டி ஏகாதசி, முக்கோட்டை ஏகாதசி) என்றும் கூறுவர். தேவர்களுக்கு இடையறாத துன்பங்களை தந்த முராசுரனை விஷ்ணு கொன்ற நாள் இது.

சொர்க்கவாசல்: வைகுண்ட ஏகாதசியன்று, திருவரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. காலப்போக்கில், வைணவக்கோயில்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பது ஒரு திருவிழாவாகவே நடைபெறுகிறது. பெருந்திரளான மக்கள் இதில் பங்கு கொள்கின்றனர். எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால், இவ்விரதம் மிகச் சிறப்பாக மதிக்கப்படுகிறது. எனவே காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; தாயை விட சிறந்த தெய்வமில்லை; ஏகாதசியை விட சிறந்த விரதமில்லை என்ற வழக்கும் ஏற்பட்டது.

திருநீறு உண்மை





திருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.? அறிவியல் உண்மை.!!

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டை ஆக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்தத
ே. எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது.

திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.

இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா!

அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.

பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன.

சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள மூளையின் புறணி (frontal cortex) என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் மூளை பின்புற மேடு (Hippocampus) என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த மூளையின் புறணி சிறப்பான முறையில் தொழிற்படும்.
உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும்.

அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து.

இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

திருவாதிரை விரத முறை





***திருவாதிரை விரதத்தின் பெருமை, அனுஷ்டிக்கும் முறை, ***ஆனந்த நடராஜபெருமானின் 6 அபிடேக தினங்கள் :

இதற்கு முந்தைய பதிவில் மார்கழி மாதத்தின் பெருமையையும், பிறப்பிலியாகிய சிவபெருமான் எவ்வாறு திருவாதிரை நட்சத்திரத்திட்கு உரியவராகி திருவாதிரையான் ஆனார் என்பதையும் பார்த்தோம்., படிக்காதவர்கள் படிக்க!!.. இன்றைய பதிவில் நடராஜப் பெருமானின் ஏனைய அபிசேக தினங்களையும் , திருவாதிரையில் அருள் பெற்ற பதஞ்சலி, வியாக்ரக பாதர் ஆகியோரது வரலாற்றையும் பார்ப்போம்.

**ஸ்ரீ நடராஜபெருமானின் 6 அபிடேக தினங்கள்.

எமது ஒருவருடமே தேவர்களின் ஒருநாளாகும். எமக்கு எவ்வாறு சிவாலயங்களில் 6 கால பூஜை ஆகமங்களில் விதிக்கப்பட்டதோ அவ்வாறே தேவர்களும் சிவபெருமானை 6 காலங்களும் பூஜித்து அருள் பெறுகின்றனர். ((இன்று நாம் தினமும் ஒருகாலமாமது சிவபெருமானை வழிபடுவதை மறந்துவிட்டோம் என்பது குறிப்பிடத்தக்கது)). அந்த 6 காலங்களுமே ஆனந்த நடராஜ மூர்த்தியின் 6 அபிடேக தினங்களாகும். இந்தத் தினம் தவிர வேறு எந்த நாட்களிலும் நடராஜருக்கு அபிடேகம் நடப்பதே இல்லை. அவையாவன…

1, ***மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்,- தேவர்களின் அதிகாலை பூஜை, (தனுர்மாத பூஜை),- சிறப்பு அபிசேகம் , நடராஜர் உற்சவம்

2, மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி - தேவர்களின் காலை சந்தி பூஜை,-அபிசேகம் மட்டும்.

3, சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம் – தேவர்களின் உச்சிக்கால பூஜை,- அபிசேகம் மட்டும்.

4, ***ஆனி மாதம் உத்திர நட்சத்திரம் – தேவர்களின் சாயங்கால பூஜை.- சிறப்பு அபிசேகம் , நடராஜர் உற்சவம்.

5, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி - தேவர்களின் இரண்டாம் கால பூஜை,- அபிசேகம் மட்டும்.

6, புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி – தேவர்களின் அர்த்தஜாம பூஜை.- அபிசேகம் மட்டும்.

***திருவாதிரை விரதித்தின் பெருமை***

ஸ்கந்த புராணத்தில் ஆருத்ரா என்றழைக்கப்படும் திருவாதிரை, முழுப் பௌர்ணமி கூடிய தினத்தன்று தான் நடராஜப்பெருமான் மாமுனி பதஞ்சலிக்கும், வியாக்ரபாதருக்கும் தனது ஆனந்த தாண்டவ திருக்கோலத்தை தில்லையில் காட்டியதாக வரலாறு., வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி ஆகியோர் இந்த திருவாதிரை விரதத்தை கடைப்பிடித்து ஐயனின் ஆனந்தத் தாண்டவத்தை தரிசனம் செய்யும் பேறு பெற்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

**மாமுனி பதஞ்சலி :-

பதஞ்சலி முனிவர் பூர்வ ஜன்மத்தில் வைகுந்தத்தில் ஆதிசேடனாக இருந்து திருமாலை தாங்கியவர். பாற்கடலில் பரந்தாமன் பள்ளிகொள்ளும் போது ஒருமுறை ஆதி சேடன் என்கிற நாகம் திருமாலின் பாரம் கூடிகொண்டுபோவதாக உணர்ந்தார். இதற்கான காரணத்தையும் திருமாலிடம் வினாவினார். அதற்கு திருமால் கூறினார் தாம் யோக நித்திரையில் இருந்தபடி பரமேஸ்வரரின் திருநடனத்தை மீட்டு ரசித்துக்கொண்டிருப்பதாகவும், அதனால் தன் உடலில் சக்தி பெருக, உடல் நிறை கூடிக்கொண்டு சென்றது என்று காரணம் கூறினார்.-( இதனால் தான் தில்லையில் ஆனந்த நடராஜ மூர்த்தியை நோக்கியவாறே திருமால் பள்ளிகொண்டவராக, மூலஸ்தானதிட்கு எதிரே தனி சன்னதியுடன் வேறெந்த சிவாலயத்திலும் இல்லாதவகையில் இங்கு மட்டும் எழுந்தருளியுள்ளார் ).-

இதை கேள்வியுற்ற ஆதிசேடனிட்கு தாமும் அந்த திருநடனத்தை காணவேண்டுமென்று ஆவல் பெருக, அதற்கு வழிகாட்டுமாறு திருமாலிடம் இரந்தார். திருமாலும் அதற்கியைந்து பின்வருமாறு கூறலானார். பூலோகத்தில் தில்லை மரங்கள் சூழ்ந்த சிதம்பரம் என்கின்ற தில்லை வனத்தில் வியாக்ரகபாதர் என்கின்ற புலிக்கால் முனிவர் சிவபெருமானின் திருநடனத்தை காண தவம் செய்வதாகவும், அவருடன் சேர்ந்து தவத்தை தில்லையில் தொடர்ந்தால் இலகுவில் ஆதிசேடனின் எண்ணம் நிறைவேறுமெனவும் கூறினார்.

அதன்படி அத்திரி மகரிஷி- அனுசுயா தேவி தம்பதியரின் மகனாக ஆதிசேடன் அவதரித்தார். அவருக்கு பதஞ்சலி என்ற பெயர் வைக்கப்பட்டது. பதஞ்சலி முனிவர், தன்னுடைய ஏழு நண்பர்களுடன் இணைந்து நந்திதேவரிடம் இருந்து இறைவழிபாட்டுடன் இணைந்த, மனம், வாக்கு, உடல் சுத்தம் என்னும் வாழ்க்கைக் கலையைக் கற்றுத்தேர்ந்தார். இவரே இன்று உலகம் முழுதும் அரிய பொக்கிசமாகபோற்றும் யோக கலையை உலகிற்கு இலகு வடிவில் யோக சூத்திரமாக அறிமுகப்படுத்தியவர்.

அதை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பல ஊர்களுக்கும் சென்றார். அதன் ஒரு பகுதியாக தன் பிறப்புக்கு காரணமான நடராஜ பெருமானின் ஆனந்த தாண்டவம் காணும் விருப்பதின் அடிப்படையில் சிதம்பரம் வந்து சேர்ந்தார். அங்கு நெடுங்காலம் தங்கி திருமூலட்டானர் என்னும் நாமத்துடன் விளங்கிய சுஜம்பு மூர்த்தியாகிய சிவலிங்க பெருமானை தரிசித்து தவமியற்றினார். நற்றவத்தின் பயனாக சிவபெருமானின் திருனடனத்தினை பௌர்ணமியுடன் கூடிய மார்கழித் திருவாதிரை நாளில் காணும் பேறும் பெற்றார் .

**மாமுனிவர் விஜாக்ரக பாதர்.

பதஞ்சலி முனிவருடன் தில்லையில் நடனம் கண்ட மற்ற முனிவர் வியாக்ரகபாத முனிவராவார். இதனால் தான் இவர்கள் இருவரின் திருவுருவங்கள் அனேகமாக நடராஜரிட்கு முன்னே ஸ்தாபிக்க பட்டிருக்கும். இவர் பதஞ்சலி முனிவரின் பிறப்பிற்கு முன்பிருந்தே தில்லை வனத்தில் தவமியற்றிக் கொண்டிருந்தவராவார். மத்யந்தின முனிவரது மகனே புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்படுகிறார். தமது தந்தையைப் போலே சிவபெருமானை அர்ச்சித்து வழிபட ஆசைக்கொண்ட அவர், தினமும் தில்லை வனத்தில் இருந்த சிவலிங்கத்திற்கு அங்குள்ள வனத்தில் பூப்பறித்து வழிபட்டு வரலானார்.

அடர்ந்த காடு, வழ வழப்பான மரங்கள், பழுத்துக் கிடக்கும் பூக்கள், வண்டு தேன் எடுத்த மலர்கள்.... இவையெல்லாம் அவரது பூஜைக்கு இடையூறாய் இருக்க...அவர் வேறு யாரிடம் வேண்டுவார்!? சிவனாரிடமே வேண்டினார்.!! என்னவென்று!? " ஐயா... ஸ்வாமி.... எனக்கு புலிகளுக்கு இருப்பது போல கால்களைக் கொடு.... அந்த கால்களில் உள்ள நகங்கள் இடையூறின்றி மரமேறவும், நல்ல பூக்களைப் பறிக்கவும் எனக்கு அருள் புரிவாய்! மேலும் உடல் முழுவதும் கண்களை கொடு சிறந்த பூக்களைத் தேடித் பறித்து சிவபூஜை செய்ய. . உன் பூஜைக்கு இடையூறு அளிக்காதே! என்ன ஒரு அற்புதமான வேண்டுதல் பாருங்கள்.!! இவரும் பதஞ்சலி முனிவருடன் சிவபெருமானின் திருனடனத்தினை பௌர்ணமியுடன் கூடிய மார்கழித் திருவாதிரை நாளில் காணும் பேறும் பெற்றார்..

**திருவாதிரை விரதத்தினை அனுஷ்டிக்கும் முறை

பரமனிடம் பாற்கடலையே பெற்ற உபமன்யு முனிவரை வியாக்ர பாதர் மகனாக பெற்றது இவ்விரத மகிமையால்தான். விபுலர் என்னும் பிராம்மணர் இவ்விரத மகிமையால் பூத உடலுடன் திவ்ய வாகனத்தில் திருக்கயிலாயம் சென்று திரும்பி வந்தார், பின்னர் பலகாலம் பூவுலகில் இனிது வாழ்ந்து முக்தியும் பெற்றார். திருவாதிரையன்று எம்பெருமான் ஆனந்த நடமாடி களித்திருப்பதால் இவ்விரதத்தை கடைப்பிடித்தால் அவரை எளிதில் திருப்திபடுத்தலாம்.

ஸ்கந்த புராணத்தில் கூறியுள்ளபடி மார்கழிமாத திருவாதிரை அன்று காலை எழுந்து ஆனந்தக் கூத்தாடும் அம்பல வாணரையும் அம்மை சிவானந்த வல்லியையும் ஆத்மார்த்தமாக வணங்கி உடல் சுத்தி செய்து, திருநீறந்து பஞ்சாக்ஷர மந்திரம் ஓதிக் கொண்டு சிவாலயம் சென்று எம்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வித்து, அமுது படைத்து, நெய் விளக்கேற்றி வழிபட்டு, நாள் முழுவதும் உண்ணா நோன்பிருந்து அந்த எம்பெருமானையே நினைத்துக் கொண்டிருந்து, ”பொன்னம்பலம் நீடூழி வாழ்க”, சித் சபேசா, ஆனந்த தாண்டவ நடராஜா, சிற்றம்பலா, அம்பலவாணா என்று பல் வேறு நாமங்களால் போற்றி வணங்கி மறு நாள் காலை எழுந்து முக்கண் முதல்வரை வணங்கி அவரின் அடியவர்களுக்கு அமுது செய்வித்து, பின் தானும் பிரசாதம் புசித்து விரதத்தை முடிக்க வேண்டும்.

இம்முறை மார்கழி திருவாதிரை 5/01/2015.
கண்களிரண்டும் பதிகம் முழுதும் கேட்க இங்கே அழுத்துக https://www.youtube.com/watch?v=u_3GmFo4ePw&index=41&list=PL3DBDD6B5163DFC10

ஈழத்து சிதம்பரம் திருவெம்பாவை முழுதும் கேட்க... https://www.youtube.com/watch?v=6Ve4sIOXlME

”பொன்னம்பலம் நீடூழி வாழ்க”.

பஞ்ச பூதங்கள்






பஞ்ச பூதங்கள் எவ்வாறு மனித உடலை தீர்மானிக்கின்றன
உடலெனும் பிரபஞ்சம்... பிரபஞ்சம்

ஐம் பூதங்களின் மொத்த உருவே பிரபஞ்சம். இதுபோல் மனித உடலும் ஐம் பூதங்களால் ஆன சிறிய பிரபஞ்சம் என்கிறார்கள் சித்தர்கள். இதைத்தான் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.

இந்த பஞ்ச பூதங்கள் எவ்வாறு மனித உடலை தீர்மானிக்கின்றன, அவற்றின் செயல்பாடுகள் என்ன என்பதை விரிவாக அறிந்துகொள்வோம்.

மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்ச பூதங்கள்.

இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானது தான் மனித உடல் எனும் பிரபஞ்சம்.

நிகழ்ந்த சீர்ப் பிருதிவியும் அப்பு நானும்

நேரான தேயுவோடு வாயுமாகும்

அகழ்ந்தவா காயத்தோ டைந்து பூதம்

அரிதான பிருதிவியு மண்ணு மாகும்

தகழ்ந்தவப்பு சலமாகும் நெருப்பாற் தேயு

தாக்கான வாயுவது காற்றுமாகும்

இகழ்ந்தவா காயமது சத்தமாகும்

ஏற்றபிரு திவியும் பொன்னிறமதாமே

யூகி வைத்திய சிந்தாமணி

மண்ணின் கூறுகள்

மண்ணை பிருத்திவி என்று அழைக்கின்றனர். எலும்பு, தோல், நரம்பு, தசை, மயிர் இவை அனைத்தும் மனித உடம்பின் மண் கூறு கொண்டவை.

பிருத்திவியில் பிருத்திவி அதாவது மண்ணில் மண் சேர்ந்ததால் உருவானதுதான் எலும்பு என்றும், மண்ணுடன் நீர் சேர்ந்து உருவானது தசை என்றும், மண்ணுடன் நெருப்பு சேர்ந்து உருவானது தோல் என்றும், மண்ணுடன் வாயு சேர்ந்து உருவானது நரம்பு என்றும், மண்ணுடன் ஆகாயம் சேர்ந்து உருவானது மயிர் என்றும் குறிப்பிடுகின்றனர்.

நீரின் கூறு (புனலின் கூறு)

நீரின் தன்மை கொண்டவை இரத்தம், விந்து (வெந்நீர்), சிறுநீர், மூளை, கொழுப்பு. நீரினை புனல் என்று அழைக்கின்றனர். நீருடன் நீர் சேர்ந்து வெளியேறுவது சிறுநீர் என்றும், நீருடன் மண் (பிருத்திவி) சேர்ந்து உருவானதுதான் உமிழ்நீர் என்றும், நீருடன் நெருப்பு சேர்ந்துதான் வியர்வையானது எனவும், நீருடன் வாயு சேர்ந்துதான் இரத்தம் (குருதி, செந்நீர்) உண்டானது எனவும், நீரின் கூறுடன் ஆகாயம் சேர்வதால் உருவானதுதான் சுக்கிலம் எனப்படும் விந்து எனவும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நெருப்பின் கூறு

உணவு, தூக்கம், அச்சம், சேர்க்கை, சோம்பல் முதலியவை நெருப்பின் கூறாகும். நெருப்பை தேயு (தீ) என அழைக்கின்றனர்.

நெருப்பு கூறுடன் நெருப்பு சேரும்போது தூக்கம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் மண் சேரும் போது பசி உருவாகிறது எனவும், நெருப்புடன் நீர் சேரும்போது தாகம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் வாயு சேரும்போது அச்சம், சோம்பல் உருவாகிறது எனவும், நெருப்புடன் ஆகாயம் சேரும்போது ஆசை, சேர்க்கை உருவாகிறது எனவும் குறிப்பிடுகின்றனர்.

வளியின் (காற்று) கூறு

ஓடல், நடத்தல், நிற்றல், உட்காருதல், படுத்தல்.

வாயுவுடன் வாயு சேரும்போது ஓடுதல் நடைபெறும் என்றும், வாயுவின் கூறுடன் மண் (பிருத்திவி) சேரும்போது படுத்தல் எனவும், வாயுடன் நீர் சேரும்போது நடத்தல் நடைபெறும் என்றும், வாயுவுடன் நெருப்பு இணையும்போது உட்காருதல் நிகழும் என்றும் வாயுவுடன் ஆகாயம் சேரும்போது தாண்டுதல், குதித்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

விண்ணின் (ஆகாயம்) கூறு

இன்பம் (காமம்), உட்பகை (குரோதம்), ஈயாமை (உலோபம்), பெருவேட்கை (மோகம்), கொழுப்பு (மதம்)

விண்ணின் தன்மையுடன் ஆகாயம் சேரும்போது மோகம் உண்டாவதாகவும், ஆகாயத்துடன் மண் சேரும்போது இராகம் உருவாவதாகவும், ஆகாயத்துடன் நீர் சேரும்போது துவேசம் ஏற்படுவதாகவும், ஆகாயத்துடன் நெருப்பு இணையும்போது பயம் உருவாவதாகவும், ஆகாயத்துடன் வாயு சேரும்போது நாணம் ஏற்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

மனித உடலில் ஐம்பூதங்களின் செயல்பாடுகளை சித்தர்கள் இவ்வாறு விளக்கியுள்ளனர்.

மண்ணின் தன்மையால் மயிர் வளர்கிறது. எலும்பு வலுவடைகிறது. நரம்புகள் அதிக வேகத்துடன் செயல்படுகின்றன. தசைகள் இறுக்கம் கொள்கின்றன.

இவ்வாறு பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளால் தான் மனித உடல் உருக்கொண்டுள்ளதாக சித்தர்கள் கூறுகின்றனர்.

இதே கருத்தையே ஆன்மீகம் தெரிவிக்கிறது. சைவ சமயத்தில் பஞ்ச பூதங்களுக்கும் கோவில்கள் அமைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மண் (பிருத்திவி)

திருவாணைக்கால் நீர்

திருவண்ணாமலை நெருப்பு

காளஹஸ்தி காற்று

சிதம்பரம் ஆகாயம்.

பஞ்ச பூதங்களையே தெய்வ வடிவமாக வணங்கி வரச் செய்துள்ளனர்