செவ்வாய், 28 அக்டோபர், 2014

கோவிலில் கடை பிடிக்க வேண்டியவை


கோவிலில் கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள் :
1. பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது.
2. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.
3. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது.
4. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது.
5. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது.
6. கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது.
7. கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது.
8. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.
9. தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.
10. ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது.
11. மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது.
12. கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது.
13. கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது.
14. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது.
15. கோவில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.
16. அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது.
17. ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது.
18. தெய்வ வழிபாடு ஈர துணி கூடாது.
19. கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது.
20. சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்யக் கூடாது.
21. கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான் கழுவிக்கொள்ள வேண்டும்
22. கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமசிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும்.
23. கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.
24. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.
25. கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.
26. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியானத்தையோ இடையுறு செய்ய கூடாது

திங்கள், 27 அக்டோபர், 2014

கந்தசஷ்டி கவசம் விளக்கம்



கந்தசஷ்டி கவசம் விளக்கம்

கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.
இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள் இவர் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். இந்த சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது.
சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர்.
நாம் அந்தத் திரு வடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம். கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள்.
முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், ப்ன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.
அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேச்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.
அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனைப உடம்பில் தான் எத்தனை பாகங்கள்ப காக்க என்று வேலை அழைக்கிறார், வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல் மார்பிற்கு ரத்தின வடிவேல்,
இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல் பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ரவேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க. அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.
அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.
அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயல் இழந்து விடும் என்கிறார். பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.
நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார். இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள்.
சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்
 — 

சனி, 25 அக்டோபர், 2014

குழந்தை பாக்கியத்திற்கு சஷ்டி விரதம்


குழந்தை பாக்கியத்திற்கு சஷ்டி விரதம் 
சஷ்டி நாயகனே தந்தைக்கு உபதேசம் செய்த சர்வமும் ஆனவனே உந்தன் திருவடி சரணம் சரணம் 
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.
முருகனுக்குரிய மூன்று விரதங்களில் (செவ்வாய்க்கிழமை விரதம், கார்த்திகை விரதம், ஷஷ்டி விரதம்) மிகச் சிறந்தது ஸ்கந்த ஷஷ்டி விரதமாகும். ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையை அடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டி ஈறாகவுள்ள ஆறு நாட்கள் ஸ்கந்த ஷஷ்டி விரதம் அனுசரிக்கப்படுகிறது. மாதம் தோறும் ஷஷ்டி திதியிலும் விரதம் இருக்கலாம்.
இவ்விரதம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் மகத்தான விரதமாகும்.
முதல் நாள் அமாவாசை முதல் தொடர்ந்து ஆறுநாட்களும் அனுசரிக்கப்படும் இவ்விரதத்தில் சிலர் மூன்று வேளையும் உண்ணா நோன்பு இருப்பர். சிலர் பகல் மட்டும் விரதம் இருந்து இரவில் பால், பழம் உண்டு விரதம் மேற் கொள்வர். விரத நன்னாளில் தர்ப்பை அணிந்து சங்கல்பம் செய்துகொண்டு ஆறு நாட்களும் முழு உபவாச விரதமிருந்து இறுதி நாளில் தர்ப்பையை அவிழ்த்து தாம்பூலத் தட்சணையுடன் அர்ச்சகரிடம் அளித்து விரதத்தை நிறைவு செய்பவர்களும் உண்டு. இவர்களில் பலர் முருகன் ஆலயத்திலேயே தங்கி விரதம் இருப்பர். உண்ணா நோன்பு மட்டுமல்லாமல் மௌன விரதம் இருப்போர்களும் உள்ளனர்.
விரத காலத்தில் முருக நாம ஜெபம், கந்த புராணம் படித்தல் நற்பலன் அளிக்கும். ஆறாம் நாள் கந்தஷஷ்டி அன்று துயிலாமல் விழித்திருந்து முருகன் பெருமைகளை நினைந்தும், பேசியும் வழிபடுதல் சிறப்பு. முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள், கந்த ஷஷ்டி தினத்தில் மட்டுமாவது உபவாசம் இருத்தல் நன்மையைத் தரும். ஏழாம் நாளன்று நீராடி, முருகனை வழிபட்டு வெல்லமும், பச்சைப் பயறும் கலந்து களி செய்து உண்டு விரதத்தை முடிக்கலாம். ஆறு நாள்களும் கந்த புராணத்தை முழுமையாகப் படிக்கலாம். கந்தர் ஷஷ்டிக் கவசம், ஸ்கந்த குரு கவசம், ஷண்முக கவசம் இவற்றைப் பாராயணம் செய்யலாம். திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, வேல் மாறல் பதிகம், திருவடித் துதி முதலியவற்றைப் பாராயணம் செய்தலும் சிறப்பு தரும். ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கத்தை உள்ளன்போடு பாராயணம் செய்ய எண்ணிய காரியம் வெற்றி பெறும்
சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் !
ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம: குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன.
சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலம் சிதம்பரம், அங்கு உஷத் காலத்தில் பெருமானின் கலைகள் எல்லாம் எல்லாத் தலங்களுக்கும் சென்று தெய்வப் பொலிவூட்டுகின்றன என்றும், அர்த்தஜாம காலத்தில் ஆயிரம் கலைகளும் பெருமானிடம் ஒடுங்குகின்றன என்றும், எனவே எல்லாத் தலங்களையும் சென்று தரிசிக்கும் புண்ணியத்தை, சிதம்பரத்தில் அர்த்தஜாமத்தில் வழிபடுவதால் பெற முடியும் என்று சிதம்பர மஹாத்மியம் குறிப்பிடப்படுகிறது. சஷ்டிபதி என்றால் இந்த வேளையில் (அர்த்தஜாமத்தில்) செய்யப்பெறும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன் என்றும் பொருள். திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.
சண்முக தத்துவம் என்ன ?
ஒரு முகம் - மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் - அக்னிக்கு,
மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு,
நான்முகம் - பிரம்மனுக்கு,
ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் - கந்தனுக்கு.
சத்ரு சம்ஹாரத்திற்கு ஒரு முகம்
முக்தி அளிக்க ஒரு முகம்
ஞானம் அருள ஒரு முகம்
அக்ஞானம் அழிக்க ஒரு முகம்
சக்தியுடன் இணைந்து அருள ஒரு முகம்
பக்தர்களுக்கு அருள ஒரு முகம்.
ஸரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன ?
ஸ - லக்ஷ்மிகடாக்ஷம்
ர - ஸரஸ்வதி கடாக்ஷம்
வ - போகம் - மோக்ஷம்
ண - சத்ருஜயம்
ப - ம்ருத்யுஜயம்
வ - நோயற்ற வாழ்வு
ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம். நம: சிவாய என்பது பஞ்சாக்ஷரம். ஓம் நம: சிவாய என்பது ஷடாக்ஷரம் நம: குமாராய என்பதும் ஷடாக்ஷரம் ஓம் நம: கார்த்தகேயாய என்பது குஹ அஷ்டாக்ஷரம் ஓம் நம; குருகுஹாய என்பதும் குஹ அஷ்டாக்ஷரம். ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் முத்திரை அடி குருகுஹ. இதய குகையில் அமர்ந்து அஞ்ஞானம் அழித்து ஞானம் அளிக்கும் வள்ளல் குகன்.
ஓம் நம: ஸரவணபவாய என்பது ம்குஹ தசாக்ஷரம்.
ஓம் நம ஸரவணபவ நம ஓம் என்பது குஹ த்வாதசாக்ஷரம்

வியாழன், 23 அக்டோபர், 2014

கந்த சஷ்டி விரதம்

கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி :
சென்ற பதிவின் தொடர்ச்சி
கந்த புராணம் கூறும் விரத முறை
சஷ்டி விரதமிருப்பவர் ஆறு நாட்களும் காலையில் நீரில் மூழ்கி, சந்தியாவந்தனம் முடித்துத் தியானத்தில் அமர்ந்து, அக்கினி, கும்பம், பிம்பம் மூன்றிலும் முருகனை எழுந்தருளச் செய்து வழிபடவேண்டும். திருமுருகன் புகழ்பாடி குளிர்ந்த நீர் பருகி உபவாசம் இருத்தல் வேண்டும். பெண்ணாசையை மறந்தும், பகலில் தூங்காமலும் இருத்தல் வேண்டும்.
நடைமுறை எளிய விரத முறை
விரத நாளான பிரதமை திதி அன்று அதிகாலை நீராடி சுத்தமான ஆடை அணிந்து முருகன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு காப்பு அணிவதுடன் விரதம் ஆரம்பிக்கப்படல் வேண்டும்
காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடி , காலை, மாலை வழிபாட்டின் போது அவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ / கேட்கவோ செய்ய வேண்டும்.
மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். வயோதிகர்கள், நோயாளிகளுக்கு இதில் விதிவிலக்கு உண்டு.
உப்பு நீர் , எலுமிச்சம் பழச்சாறு, நார்த்தம்பழச்சாறு, இளநீர் போன்றவை அருந்துவதும் அறவே கூடாது.
இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஏழாம் நாள் அதிகாலை நீராடி முருக வழிபாட்டினை மேற்கொண்டு அடியவர்களுக்கு அன்னதானம் செய்த பின் தானும் உண்டு பாரணையுடன் விரதத்தினை சிறப்புடன் முடிக்க வேண்டும் .
விரத நாட்கள் முழுவதும் வீட்டில் தூய்மை காக்க வேண்டும். கடுமொழி, தகாத மொழி பேசுவது கூடாது. தாம்பத்திய உறவை துறக்க வேண்டும். முருகன் திருஉருவத்தை தியானம் செய்ய வேண்டும்.
இந்த 6 நாட்கள் விரதத்தின் போது, " சரவண பவ " எனும் ஆறெழுத்து மந்திரத்தையும், சஷ்டி கவசத்தையும் படித்து வருவோருக்கு முன் வினைகள் நீங்குவதோடு, இல்லத்தில் ஐஸ்வரியமும், மகிழ்ச்சியும் ஓங்கும் என்பது கந்த புராணம் சொல்லும் செய்தி
குறிப்பு : திருசெந்தூர் முருகனை ஆறு கரங்களுடன் இந்த நாட்களில் மட்டுமே காண முடியும் . மற்ற நாட்களில் இந்த கரங்கள் துணியால் மூடப்பட்டு இருக்கும்

துளசி

துளசியின் சிறப்பும் பெருமையும்!
எத்தனை வகைப்பூக்கள் இருந்தாலும், துளசி செடி இல்லாவிட்டால் அது நந்தவனம் ஆகாது.
* துளசி மட்டுமிருந்தால் கூட அது சிறந்த நந்தவனமாகிவிடும்.
* துளசி படர்ந்த இடம் பிருந்தாவனமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தை.
* துளசி மாலை அணிந்தோ, துளசி மாலையை கையில் பிடித்தோ பூஜிப்பவர்களுக்கு, 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
* மரண காலத்தில் துளசி தீர்த்தம் அருந்துபவர்களை பெருமாள் தன்னுடன் சேர்த்து கொள்கிறார்.
* பவுர்ணமி, அமாவாசை, சஷ்டி, தீட்டு காலங்கள், துவாதசி, மாதப்பிறப்பு, உச்சி வேளை, இரவு வேளை, எண்ணை தேய்த்து கொண்டு துளசி பறிக்க கூடாது.
* அதிகாலைப்பொழுதும், சனிக்கிழமைகளிலும் விரல் நகம் படாமல் விஷ்ணு பெயரை உச்சரித்து கொண்டு துளசி பறிக்க வேண்டும்.
* துளசி பறித்த 3 நாள் வரை உபயோகப்படுத்தலாம்.
* விரதநாள், மூதாதையரின் திதி நாள், தெய்வ பிரதிஷ்டை நாள், இறைவனை வணங்கும் வேளை, தானம் செய்யும் போது ஆகிய இடங்களில் துளசி பயன்படுத்துவதால் அந்த செயல் பரிபூரண பலன் கொடுக்கும்.
துளசியின் வேறு பெயர்கள்
துளசியின் மந்திரப்பெயர்கள் பிருந்தா, பிருந்தாவனி,விஸ்வபாவனி, புஷ்பசாரை, நந்தினி, கிருஷ்ணஜீவனி, பிருந்தாவனி, விஸ்வபூஜிதா.
துளசியின் நதி ரூபப்பெயர் கண்டகி.
துளசியின் தாவரப்பெயர் சேக்ரட் பேசில் பிளான்ட்.
துளசியின் கணவன் பெயர் சங்க சூடன்.
சங்காபிஷேகத்தில் துளசி
சங்கு, துளசி, சாளக்கிராமம் (புண்ணிய நதிகளில் கிடைக்கும் கல் வடிவ சிலை) மூன்றையும் ஒன்றாக பூஜிப்பவர்களுக்கு மஹாஞானியாகும் பாக்கியமும், முக்காலமும் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது. சிவபெருமானுக்கு பிடித்த அபிஷேகங்களில் உயர்ந்தது சங்காபிஷேகம்.
துளசியின் கதை
கிருஷ்ணாவதாரத்தில் மகாவிஷ்ணுவின் அம்சமாக சுதர்மரும், லட்சுமியின் அம்சமாக ராதையும் அவதாரம் செய்கிறார்கள். இவர்களிருவரும் கிருஷ்ணனை அதிகம் நேசிக்கிறார்கள். ஒரு முறை ராதை சுதர்மர் மீது கோபம் கொண்டு சாபமிடுகிறார். இதனால் சுதாமர் சங்கசூடன் என்ற வேறொரு பிறப்பு எடுக்க வேண்டியதாயிற்று. அதேபோல் ராதையும் மாதவி என பிறப்பெடுக்கிறாள். மாதவியின் மகள் தான் துளசி. சங்கசூடனும், துளசியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின் கிருஷ்ணரால் துளசியின் ஆயுள் காலமும், சிவனால் சங்கசூடனின் ஆயுளும் முடிவடைந்தது. இதனால் சங்கசூடன் விஷ்ணுவுடனும், துளசி மகாலட்சுமியுடனும் மீண்டும் கலந்து விட்டார்கள். இதனாலேயே துளசியும் சங்கும் இருக்குமிடத்தில் பெருமாளும், லட்சுமியும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது.
உண்மையான பக்தி
கிருஷ்ண பகவான் பாமா, ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார். இதில் ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள். அத்துடன் கிருஷ்ணனை தன் மனதில் வைத்து எப்போதும் பூஜித்து வந்தாள். ஆனால் பாமாவோ, விஷ்ணு தன்னை மார்பில் சுமந்திருப்பதாலும், கண்ணனுக்கு தேரோட்டியாக இருந்ததாலும், தனது திருமணத்தின் போது ஏராளமான செல்வம் கொண்டு வந்தாலும் நாரதரின் உதவியோடு கண்ணனை தனக்கே உரிமையாக்கிகொள்ள நினைத்தாள். இதற்காக கண்ணனை, துலாபார தராசு தட்டின் ஒரு புறமும், மற்றொரு தட்டில் தனது செல்வம் முழுவதையும் வைத்தாள். ஆனால் தராசு சமமாகவில்லை. அப்போது அங்கு வந்த ருக்மணி, கண்ணனுக்காக கொடுக்க தன்னிடம் ஒன்றுமில்லையே என வருந்தி, கண்ணனுக்கு பிடித்த துளசி இலை ஒன்றை தராசு தட்டில் வைத்த போது தராசு சமமாகியது. கண்ணன் புன்முறுவலுடன், நான் இப்போது யாருக்கு சொந்தமானவன் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். நான், எனது என்ற அகந்தையை ஒழித்து, உண்மையான பக்தியுடன் என்னை சரணடைபவருக்கே நான் சொந்தம், என்றார். தனது அகந்தை நீங்கிய நிலையில் கண்ணனின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமா, அந்த துளசி இலையை தன் தலையில் சூடிக்கொண்டாள்.

திங்கள், 13 அக்டோபர், 2014

நவரத்தின மோதிரம் எப்படி அணிய வேண்டும்.....

நவரத்தின மோதிரங்களை யார் எப்படி அணிய வேண்டும்.....
செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்கள்தான் நவரத்தினம் அணிய வேண்டும் என்பது பெரும்பான்மையினர் கருத்து.மேலும் நவரத்தினங்களை வாங்கி சில நாட்கள் தன்னுடன் வைத்திருந்து பரீட்சித்து பார்த்து அணிந்து கொள்வது நலம்.நவரத்தின மோதிரம் அணிந்து சிலருக்கு காய்ச்சல்,தலைவலி ஏற்படலாம்.
பொதுவாக ஓபன் செட்டிங்கில் அணிவது பலன்தரும்.தங்கத்தில் மட்டுமே பதித்து அணிய வேண்டும்.இரத்தின நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்குவது நல்லது.
பதிக்கும் முறை
மோதிரத்தின் நடுவில் சூரியனுக்குரிய மாணிக்கத்தை வைத்து அதன் கிழக்குபக்கம் வைரம் பதிக்க வேண்டும்.பிறகு கடிகார சுற்றுபடி முத்து,பவளம்,கோமேதகம்,நீலம்,வைடூரியம்,புஷ்பராகம் மரகதம் ஆகியவற்றை வரிசையாய் பதிக்க வேண்டும்.
நவரத்தினங்கள் தரும் நற்பலன்கள்
நவரத்தின மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால் அவர் மிக சிறந்த அதிஷ்ட சாலிதான். பெரும் சாதனைகள் படைக்கலாம்.எதிலும் வெற்றிகிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி,புகழ்,செல்வாக்கு அனைத்தும் கிடைக்கும்.போடும் திட்டங்கள் எல்லாம் சரியானதாக இருக்கும்.உழைப்பிற்க்கு முழுமையான வெற்றி கிடைக்கும்.
யாரெல்லாம் நவரத்தின மோதிரம் அணியலாம் ...?
மேஷ ராசி,மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள்
மிருகசீரிஷம்,அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணியலாம். ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .
எண் கணித படி 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம்.
பிறவி எண் 2,7 கொண்டவர்கள் நவரத்தின மோதிரம் அணிய கூடாது. வேறு எந்த வகையிலாவது நவரத்தின மோதியம் அணியலாம் என்ற நிலை இருப்பின் ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்துதான் அணிய வேண்டும்.

புதன், 8 அக்டோபர், 2014

ஆய கலைகள் 64

ஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . அவ்வாறு கேள்விப்பட்ட 64 கலைகள் எது எது என்று தற்போது தெரிந்து கொள்வோம்.
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)
2. எழுத்தாற்றல் (லிகிதம்)
3. கணிதம்
4. மறைநூல் (வேதம்)
5. தொன்மம் (புராணம்)
6. இலக்கணம் (வியாகரணம்)
7. நயனூல் (நீதி சாத்திரம்)
8. கணியம் (சோதிட சாத்திரம்)
9. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்)
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)